ஷா ஆலாம், ஜூலை 1 - ஷா ஆலாம் எல்.ஆர்.டி 3 நிலையங்களைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் நடைபாதை மற்றும் இதர பொது வசதிகள் ஆகியவற்றின் கட்டுமானங்கள் விரைப்படுத்தப்படும். அதற்காக ஷா ஆலாம் மாநகராட்சி, மேம்பாட்டாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்குமென அம்மாநகராட்சியின் தலைவர் டத்தோ சபிடா சாஃபார் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட எல்.ஆர்.டி நிலையப் பகுதிகளில், மேம்பாட்டு அனுமதியின் ஒரு பகுதியாக பொது வசதிகளை மேம்பாட்டாளர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
எனவே,இவ்விவகாரத்தை ஷா ஆலாம் மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து வருமென அவர் குறிப்பிட்டார்.
பொது வசதிக்கான மேம்பாட்டினை விரைவுப்படுத்தும் அவசியம் ஏற்படும் நிலையில், தமது தரப்பு வேண்டிய உதவிகளைச் செய்யுமென, ஷா ஆலாம் எல்.ஆர்.டி நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிலையத்துக்குச் செல்லும் பகுதியில், இன்னும் முழுமைப் பெறாத நிலையில் இருக்கும் பாதசாரிகளுக்கான நடைபாதை குறித்த காணொளி வைரலானதை அடுத்து, சபிடா இன்று அப்பகுதியை நேரில் பார்வையிட்டார்.







