கோலாலம்பூர், 20 மே - சமூக ஊடகங்களில் தனிநபர்கள் போதையில் திளைப்பதையும், வரம்பு மீறி வேப் பயன்படுத்துவதையும் காட்டும் பல காணொளிகள் பரவியதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கலந்ததாக சந்தேகிக்கப்படும் வேப் விநியோகிப்பாளர் உட்பட ஆறு ஆடவர்களை போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) கைது செய்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் கலாச்சாரத்தை இயல்பாக்குவதற்கும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கும் வேப் ஒரு ஊடகமாக மாறுவது குறித்து தனது துறை தீவிரமாகக் கருதுவதாக புக்கிட் அமான் JSJN இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.
பயனர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில், சில வேப்களில் அபாயகரமான பொருட்கள் அல்லது செயற்கை போதைப்பொருட்கள் கலக்கப் பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் JSJN நிராகரிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
"சிலாங்கூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் கலந்த வேப் புகைத்ததால் போதையில் இருந்த இரு ஆடவர்களைக் காட்டும் காணொளி தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக, காணொளியில் இருந்த இருவரும் அவர்களின் வேப் விநியோகிப்பாளர் உட்பட மூவர் கைது செய்யப் பட்டனர்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
"இந்தச் சோதனையின் போது, கெத்தாமின் கலந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு போத்தல் வேப் திரவத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்," என்றார்.
ஜொகூர் பாருவில் சமூக ஊடக செயலி ஒன்றில் நேரலையில் வேப் புகைத்த இரு ஆடவர்களைக் காட்டிய மற்றொரு காணொளி மீதும் JSJN நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
"அந்த நடவடிக்கையின் விளைவாக, காணொளியில் இருந்த இருவர் உட்பட மூன்று உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். பார்வையாளர்களிடமிருந்து பரிசுகளைப் பெறுவதற்காக மட்டுமே தாங்கள் நேரலை செய்ததாக விசாரணையில் அவர்கள் ஒப்புக்கொண்டனர்," என்றார் ஹுசைன்.
இதற்கு முன்னர், சுகாதாரம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகங்கள், தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், உள்ளூர் அதிகாரசபைகள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் ஆகியவற்றுடன் இணைந்து கடந்த ஏப்ரல் 13 முதல் 17 வரை நாடு தழுவிய 'ஓப்ஸ் வேப் 1.0' நடவடிக்கையை JSJN மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, வேப் விற்கும் 1,670 வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு உள்ளூர் ஆண்கள், ஒரு சீன நாட்டவர், மற்றும் இரண்டு உள்ளூர் பெண்கள் உட்பட ஐந்து பேர் அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 39B-இன் கீழ் கைது செய்யப்பட்டனர்.
"ஓப்ஸ் வேப் 1.0-இல், 'ஃபியூரனைல் ஃபெண்டானில்' (Furanyl Fentanyl) என்ற போதைப்பொருள் கலந்ததாக சந்தேகிக்கப்படும் 19.67 கிலோகிராம் வேப் திரவத்தையும், போதைப்பொருள் இல்லாத 186.54 கிலோகிராம் வேப் திரவத்தையும் JSJN பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 4.6 மில்லியன் ரிங்கிட் ஆகும்," என்றார்.
தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட வேப் விநியோக நடவடிக்கைகளை ஒழிக்க, JSJN தொடர்ந்து உளவு, கண்காணிப்பு மற்றும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்.
"சட்டத்தை மீறும் எந்தத் தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் வலியுறுத்தினார். பெற்றோர்களும் சமூகமும் தங்கள் குழந்தைகளின் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும் என்றும், தற்போது வேகமாகப் பரவி வரும் வேப் அச்சுறுத்தலை எளிதாகக் கருத வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் JSJN ஹாட்லைன் எண் 012-208 7222 மூலம் தெரிவிக்கலாம்.
போதையில் திளைக்கும் காணொளி பரவல்: போதைப்பொருள் கலந்த வேப் விநியோகிப்பாளர் உட்பட அறுவர் கைது
20 மே 2026, 2:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்
Bernama
26 ஜூலை 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு
Shalini Rajamogun
26 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?

