ஜூன் முதல் புதிய மலேசிய சர்வதேசக் கடப்பிதழ் அறிமுகம்

20 மே 2026, 1:27 AM
ஜூன் முதல் புதிய மலேசிய சர்வதேசக் கடப்பிதழ் அறிமுகம்

புத்ராஜெயா, மே 20 – மலேசியாவின் அடையாள ஆவணப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 94 பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய மலேசிய சர்வதேசக் கடப்பிதழ் எதிர்வரும் ஜூன் ஒன்றாம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.

இந்த புதிய திட்டத்தின் முதற்கட்ட அமலாக்கம் நாட்டில் உள்ள நான்கு முக்கிய குடிநுழைவு அலுவலகங்களில் மட்டுமே தொடங்கப்படும் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

அதன்படி, புத்ராஜெயாவில் உள்ள குடிநுழைவுத்துறை தலைமையகம், ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலம்பூர் கடப்பிதழ் அலுவலகம், வங்சா மாஜு யூடிசி மையம் மற்றும் ஷா ஆலம் குடிநுழைவு அலுவலகம் ஆகிய நான்கு மையங்களில் இந்த புதிய கடப்பிதழ்கள் முதலில் விநியோகிக்கப்படும்.

இந்த நடைமுறை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் நாடு முழுவதும் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தற்போதைய கடப்பிதழில் 49 பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இருந்த நிலையில், புதிய பதிப்பில் அது இருமடங்காக அதிகரிக்கப்பட்டு 94 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடப்பிதழின் பாதுகாப்பை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு செல்லவும், போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை முற்றிலும் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற குடிவரவுத்துறையின் சிறந்த சேவை விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சகாரியா விளக்கமளித்தார்.

இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களில் ஹோலோகிராம் தொழில்நுட்பம், மறைக்கப்பட்ட காட்சி கூறுகள் மற்றும் சில சிறப்பு தடயவியல் அம்சங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், கடப்பிதழ் புத்தகத்தைத் தைக்கப் பயன்படுத்தப்படும் நூலில் கூட பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் ஒவ்வொரு பக்கமும் தனித்துவமான பாதுகாப்பு தன்மையைக் கொண்டிருக்கும் என்றும் அவர் விவரித்தார்.

அதே வேளையில், பொதுமக்கள் புதிய கடப்பிதழைப் பெறுவதற்காக அவசரப்பட வேண்டாம் என்றும், தங்களின் தற்போதைய கடப்பிதழ் இன்னும் ஆறு மாதங்களுக்கும் மேலான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டிருந்தால், அதனைத் தொடர்ந்து தாராளமாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

அந்த கடப்பிதழ்களின் செல்லுபடியாகும் காலம் முடிந்த பிறகு மட்டுமே புதிய பதிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், புதிய கடப்பிதழிற்கான விண்ணப்பங்களை இணையம் மூலமாகவும் மேற்கொள்ளலாம் என்றாலும், அது குறிப்பிட்ட அலுவலகங்களின் வேலைப்பளு மற்றும் கொள்ளளவைப் பொறுத்தே அமையும் என்றார்.

குறிப்பாக, இணையம் வழி விண்ணப்பிப்பவர்கள் தங்களின் உண்மையான புகைப்படங்களையே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

தங்களை அழகாகக் காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது நிறத்தை மாற்றுவதற்காகவோ சிலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை குடிநுழைவுத்துறை கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய போலியான புகைப்படங்களைக் கண்டறிவதில் தங்களின் அதிகாரிகள் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

மலேசியாவின் கடப்பிதழ் மற்றும் மைக்காட் ஆகிய அடையாள ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த புதிய பதிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.

உலகளவில் மலேசிய கடப்பிதழ் மிகவும் நம்பகமான ஒன்றாகக் கருதப்படும் வேளையில், இந்த புதிய மாற்றம் ஒரு மைல்கல்லாக அமையும். உலக அளவில் சக்திவாய்ந்த கடப்பிதழ்களின் வரிசையில் மலேசிய கடப்பிதழ் கடந்த 2025ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.