கோலாலம்பூர், மே 19 – உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள விநியோக நெருக்கடியை எதிர்கொள்வதில், நாட்டின் தயார்நிலை, துல்லியமான கொள்கைகள், பயனுள்ள அமலாக்கம் மற்றும் மக்களுக்குப் பொதுவான உதவி வழங்குதல் ஆகியவற்றில் அரசாங்கம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த உலகளாவிய விநியோக நெருக்கடியை அரசாங்கம் தொடர்ந்து நான்கு முக்கிய முன்னுரிமைகளின் அடிப்படையில் கையாண்டு வருவதாகப் பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசிர் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பாக உணவு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்கு முதல் கட்டமாக முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதோடு, மானிய மேலாண்மை, கசிவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கடுமையான அமலாக்கத்தின் மூலமாகத் தற்போதைய விநியோகத்தை நீட்டிக்கவும், அதனை மேம்படுத்தவும் அரசாங்கம் முயன்று வருகிறது.
மக்களின் மீதான வாழ்க்கைச் செலவினப் சுமையைக் குறைக்கும் நோக்கில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, செலவின அழுத்தங்கள் முழுமையாக மக்கள் மீது திணிக்கப்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்து வருகிறது.
மேலும், பயோடீசல் (biodiesel), நிலையான எரிபொருள் மற்றும் மாற்று ஆதாரங்கள் உள்ளிட்ட புதிய வாய்ப்புகளை அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு கொள்கை முடிவும் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் விரிவாக மதிப்பீடு செய்வதற்காக தொழில்துறையினர், வணிகச் சங்கங்கள், அமைச்சகங்கள், அமலாக்க முகமைகள் மற்றும் இதர பங்குதாரர்களுடனான ஈடுபாடுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இன்று நடைபெற்ற உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்த விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் மக்களின் நலன் மற்றும் நாட்டின் பொருளாதார நெகிழ்வுத்தன்மையைப் பாதுகாப்பதே ஆகும் என்று குறிப்பிட்டார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) எண்கள் சிறப்பாக இருப்பது நம்பிக்கையை அளித்தாலும், மக்களின் உண்மையான வாழ்க்கைச் செலவினப் போராட்டம், தொழில்துறையின் செயல்பாட்டு அழுத்தங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவை, அரசாங்கத்தை தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கவும் விரைந்து செயல்படவும் தூண்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விநியோக நெருக்கடிக் காலத்தில், தற்போதைய சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் ஏதுவாக, தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் (MTEN) இன்று உட்பட 10 முறை கூடியுள்ளது. கடந்த மே 12-ஆம் தேதி வரை, 13 பொருளாதாரத் துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 24 விளக்கக் தாள்கள் விவாதிக்கப்பட்டு, 96 முடிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 11 முடிவுகள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ள வேளையில், 78 முடிவுகள் இன்னும் அமலாக்கக் கட்டத்தில் உள்ளன.
இது, அரசாங்கத்தின் அணுகுமுறை வெறும் தற்காலிக எதிர்வினையாக மட்டும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மாறாக, ஒவ்வொரு முடிவும் உடனடியாகவும் திறம்படவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வாராந்திர கண்காணிப்பு, அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு நிலவர ஆய்வு ஆகியவற்றின் மூலம் அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.








