ஷா ஆலம், மே 19 - சிலாங்கூர் மாநிலத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பொதுச் சொத்து சேதப்படுத்துதல் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள் திருட்டுச் சம்பவங்களை முழுமையாக ஒடுக்குவதற்கு, பொதுமக்கள் அனைவரும் அதிகாரிகளுடன் கைகோர்த்து தீவிரமாகக் களமிறங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய குற்றச்செயல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் தடையற்ற தகவல் தொடர்பையும் நேரடியாகப் பாதிப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இத்திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்திருந்தாலும், இந்த விவகாரம் இன்னும் முற்றாக ஒழியவில்லை என்றும், இதனைத் தடுப்பதற்குத் தொடர் நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று ஷா ஆலம் கிளப்பில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில அளவிலான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பொதுச் சொத்து சேதப்படுத்துதல் தடுப்பு பிரச்சாரத் தொடக்க விழாவிற்குப் தலைமை தாங்கிப் பேசிய போது மந்திரி புசார் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருட காலத்தில் இத்தகைய குற்றச்செயல்கள் மிக அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்கட்டமைப்பு அமைப்புகளை வலுப்படுத்த மேற்கொண்ட பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளின் காரணமாகவே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புகார்களின் எண்ணிக்கை ஓரளவுக்குக் குறைந்துள்ளதாகக் கூறினார்.
எனினும், நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருப்பது, இந்த விவகாரத்தில் இன்னும் தீவிரமான கூட்டு நடவடிக்கைகள் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டுவதாக அவர் விவரித்தார்.
இந்தச் சவாலை எதிர்கொள்வது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமே அல்ல என்று சுட்டிக்காட்டிய அமிருடின் ஷாரி, இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூர் மக்கள் தடையற்ற டிஜிட்டல் சேவையைப் பெறுவதை உறுதி செய்ய கிராமத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் முழுமையாகத் திரட்டப்படுவார்கள் என்றும், இதன் மூலம் குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மட்டுமின்றி, சமூக அளவிலான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) மூத்த செயல்பாட்டு ஆலோசகர் டத்தோ சுல்கர்னைன் முகமட் யாசின், மலேசியாவிலேயே தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் அதிகமாகச் சேதப்படுத்தப்படும் மாநிலமாகச் சிலாங்கூர் இன்னமும் முதலிடத்தில் நீடிப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 1,836 சம்பவங்களும், 2025-ஆம் ஆண்டில் 1,273 சம்பவங்களும் பதிவாகியுள்ள வேளையில், ரவாங், கோம்பாக் மற்றும் பாங்கி ஆகிய பகுதிகள் இத்தகைய குற்றங்கள் அதிகம் நடைபெறும் அபாயகரமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், சுங்கை தெக்காலா, உலு லங்காட் பகுதியில், மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட முக்கியமான நெட்வொர்க் உதிரிபாகங்கள் திருடப்படுவதால், அங்குத் தகவல் தொடர்புச் சேவை மீட்டமைக்கப்பட நீண்ட காலம் எடுப்பதாக டத்தோ சுல்கர்னைன் விவரித்தார்.
திருடப்படும் சில அதிநவீன உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், பழுதுபார்க்கும் பணிகள் தாமதமாகி, தினசரி தகவல் தொடர்பை நம்பியிருக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், சேவையின் ஸ்திரத்தன்மையும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.








