கேபிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது; பள்ளிவாசல் உண்டியல் திருட்டு வழக்கில் 4 பேர் கைது

2 மார்ச் 2026, 8:23 AM
கேபிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது; பள்ளிவாசல் உண்டியல் திருட்டு வழக்கில் 4 பேர் கைது

ஷா ஆலம், மார்ச் 2: கடந்த பிப்ரவரி 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட 'ஓப் காபெல் வைரல்' (Op Kabel Viral) எனும் சிறப்பு நடவடிக்கையின் மூலம், கேபிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேரை சிலாங்கூர் மாநிலப் போலீசார் கைது செய்துள்ளனர். டெங்கில், சுங்கை பட்டாணி மற்றும் ஈப்போ ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வெவ்வேறு சோதனைகளில், 19 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் பிடிபட்டனர். இவர்களில் இருவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும், பிடிபட்டவர்களில் பெரும்பாலானோருக்குத் திருட்டு, கொள்ளை மற்றும் போதைப்பொருள் தொடர்பான பழைய குற்றப் பின்னணிகள் இருப்பதையும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் உறுதிப்படுத்தினார். மேலும், கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஏழு பேருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதியானது.

 

இந்தக் கும்பல் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததோடு, அதிகாரிகளின் கண்ணில் படாமல் இருக்க டெலிகோம் மலேசியா (TM) நிறுவனத்தின் சீருடை, பாதுகாப்பு கவசம் மற்றும் விளக்குகளைப் பயன்படுத்திப் பணியாற்றுபவர்கள் போல நடித்து கேபிள்களைத் திருடி வந்துள்ளனர். சோதனையின் போது BMW, நிசான் நவாரா  மற்றும் மிட்சுபிஷி லாரி ஆகிய வாகனங்களுடன், திருடப்பட்ட 12 கேபிள்கள் மற்றும் அவற்றை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் கும்பல் மீதான விசாரணை குற்றவியல் சட்டத்தின் 379 மற்றும் 414 ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது; இவர்கள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்றொரு நிலவரத்தில், ஷா ஆலம் செக்சன் 7-இல் உள்ள ஒரு பள்ளிவாசலில் உண்டியல் பணத்தைத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு ஆண்களும் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் இத்தகைய குற்றச் செயல்கள் குறித்து சிலாங்கூர் சுல்தான் அவர்கள் தனது கவலையைத் தெரிவித்திருந்த நிலையில், இச்சம்பவம் மிகுந்த கவனத்தைப் பெற்றது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மசூதி மற்றும் சூராவ் நிர்வாகத்தினர் தங்களின் கண்காணிப்பு கேமராக்கள்  முறையாகச் செயல்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு போலீஸ் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.