ஷா ஆலம், மே 15 – கிள்ளான் பகுதியில் நீர் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு வளாகங்களின் சட்டவிரோத நீர் இணைப்புகளை ஆயர் சிலாங்கூர் (Air Selangor) நிறுவனம் துண்டித்துள்ளது.
தேசிய நீர் சேவை ஆணையத்துடன் (SPAN) இணைந்து நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், சாபா மாநில நீர் வாரிய அதிகாரிகளும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். ஆயர் சிலாங்கூர் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த சுமார் 24 அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டதாக அந்த நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முறையான அனுமதி இன்றி பொது நீர் விநியோகக் குழாய்களில் இருந்து நேரடி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த இணைப்புகளை நிரந்தரமாகத் துண்டித்த அதிகாரிகள், நீர் இழப்பிற்கான இழப்பீடு கோரி சம்பந்தப்பட்ட வளாக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
சட்டவிரோத நீர் இணைப்பு மற்றும் நீர் திருட்டு ஆகியவை 2006-ஆம் ஆண்டு நீர் சேவைத் தொழில் சட்டத்தின் (WSIA) கீழ் கடுமையான குற்றமாகும். இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா பகுதிகளில் வசிக்கும் நேர்மையான நுகர்வோருக்கான நீர் விநியோகத்தைப் பாதிப்பதாக ஆயர் சிலாங்கூர் சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள், நாட்டின் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதிலும், நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்வதிலும் தங்களுக்குள்ள உறுதியை வெளிப்படுத்துவதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.









