காஜாங், மே 15 – காஜாங் மாநிலச் சட்டமன்றத் தொகுதியில் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட 45 குடியிருப்பாளர்களுக்குச் சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை (Yayasan MBI) மொத்தம் 45,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இந்த மனிதாபிமானச் செயல்பாட்டின் கீழ், தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா 3,000 ரிங்கிட்டும், புயல் காற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா 1,000 ரிங்கிட்டும் ரொக்க உதவியாக வழங்கப்பட்டது.
சுங்கை காந்தான் மண்டபத்தில் நடைபெற்ற இந்த உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அறக்கட்டளையின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரிடர்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவுவது அறக்கட்டளையின் வழக்கமான ஒரு கடமையாகும் என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக காஜாங் பகுதியில் அடிக்கடி புயல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இது குறித்து அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் தங்களுக்குத் தொடர்ந்து தகவல் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தீ விபத்து, வெள்ளம் மற்றும் எரிவாயு குழாய் கசிவு போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக உதவும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாக அவர் விளக்கினார்.
நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 400,000 ரிங்கிட் நிதி பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவேளை நிதிப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டின் மூலம் அவை ஈடுசெய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாகக் கருத்துரைத்த காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங், தனது தொகுதி மக்களின் சுமையைக் குறைக்க முன்வந்த மந்திரி புசார் அறக்கட்டளைக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குழுக்களுடன் (JPKK) இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் திரட்டப்படுவதாகவும், இத்தகைய இடர்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள் தகுந்த விண்ணப்பப் படிவங்களைச் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமர்ப்பித்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.







