கோலாலம்பூர், மே 14: கப்பல் எதிர்ப்பு ஏவுகணை (NSM) விநியோக ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து இழப்பீடு மற்றும் நஷ்ட ஈடு கோருவதற்காகப் பாதுகாப்பு அமைச்சு சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
சுமார் 500 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தத்திற்காக, மலேசிய அரசாங்கம் ஏற்கனவே 95 விழுக்காடு தொகையைச் செலுத்திவிட்ட நிலையில், இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
இன்று இங்கு நடைபெற்ற 'புரோவிரா' (PROWIRA) பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவை மட்டத்தில் இதற்கென பிரத்யேகக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"நாங்கள் செலுத்திய அசல் தொகையைத் திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், ஒப்பந்த மீறலால் ஏற்பட்டுள்ள இதர இழப்புகளுக்கும் சேர்த்து நஷ்டஈடு கோருவதற்கான விவரங்களை இந்தக் குழு விரிவாக ஆராய்ந்து வருகிறது," என்று அவர் கூறினார். செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட வாய்ப்புகள் மற்றும் கணக்கீடுகளை அமைச்சு தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதே வேளையில், ரத்து செய்யப்பட்ட NSM ஏவுகணை அமைப்புக்குப் பதிலாக, பொருத்தமான மாற்று ஏவுகணை அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் விநியோகம் செய்யக்கூடிய மற்றும் மலேசியக் கப்பல்களின் தகவல் தொடர்பு மற்றும் மின்சாரக் கட்டமைப்புடன் இணங்கக்கூடிய அமைப்புகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஒரு புதிய ஏவுகணை அமைப்பைக் கப்பலுடன் ஒருங்கிணைக்க இன்னும் சில மாதங்கள் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
ஏவுகணை விநியோகம் ரத்து செய்யப்பட்டாலும், மலேசியக் கடற்படையின் முதல் கடலோரப் போர்க்கப்பலான 'கே.டி மகாராஜலேலா' (KD Maharajalela) திட்டமிட்டபடி வரும் டிசம்பர் மாதம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
"எல்.சி.எஸ் (LCS) கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால், ஆரம்பக் கட்டத்தில் அந்தக் கப்பலில் தரைக்குத் தரை பாயும் ஏவுகணை அமைப்பு மட்டும் இருக்காது," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 124 மில்லியன் யூரோ (சுமார் 571.9 மில்லியன் ரிங்கிட்) ஆகும். ஆறு புதிய எல்.சி.எஸ் கப்பல்களுக்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.








