தென்மேற்கு பருவக்காற்று தொடக்கம்: வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

14 மே 2026, 6:36 AM
தென்மேற்கு பருவக்காற்று தொடக்கம்: வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஷா ஆலம், மே 14: இன்று முதல் நாடு தென்மேற்கு பருவக்காற்று (Monsun Barat Daya) காலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், வெப்பமான மற்றும் வறண்ட வானிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களது வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலப் பொதுச் சுகாதாரத் துறை செயற்குழு உறுப்பினர் (EXCO) ஜமாலியா ஜமாலுடின் இது குறித்துக் கூறுகையில், குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய தரப்பினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க, அதிகப்படியான நீரைப் பருகுவது, மெல்லிய ஆடைகளை அணிவது மற்றும் வெயிலில் அலைவதைத் தவிர்ப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

"தலைச்சுற்றல், அதீத சோர்வு அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், பொதுமக்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும்," என்று அவர் மீடியா சிலாங்கூர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

முன்னதாக, மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (MetMalaysia) தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறுகையில், இந்தப் பருவக்காற்று காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், மேகக்கூட்டங்கள் உருவாவது குறைந்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையளவு இயல்பை விடக் குறைவாகவே இருக்கும். இதனால் மழை இல்லாத நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அவர் கணித்துள்ளார்.

இதற்கிடையில், வறண்ட வானிலையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு, சுற்றுச்சூழல் துறை (JAS) மற்றும் ஊராட்சி மன்றங்கள் (PBT) மூலமாக காற்றின் தரத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கும் என ஜமாலியா தெரிவித்தார். குறிப்பாக, குப்பை கிடங்குகள் போன்ற தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்படும்.

திறந்த வெளியில் குப்பைகளை எரிக்கும் நபர்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கு எதிராகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுவதோடு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்படும் என அவர் எச்சரித்தார்.

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், புகைமூட்டத்தைத் தவிர்க்கவும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.