சிங்கப்பூர், டிசம்பர் 5: வடகிழக்கு பருவமழை மார்ச் 2026 வரை தொடரும் நிலையில், பலமான காற்று, கடும் அலைகள் மற்றும் கனமழை வரக்கூடும் என்பதால் பொதுமக்கள், துறைமுக பயன்பாட்டாளர்கள் மற்றும் கடல் துறையினர் எச்சரிக்கையுடன் இருக்க சிங்கப்பூர் அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையத்தின் (MPA) ஆய்வாளர்கள் படகுகள், துறைமுகக் கப்பல்கள் மற்றும் பொழுதுபோக்கு கப்பல்களில் பாதுகாப்பு சோதனைகளை அதிகரிக்க உத்தர விட்டுள்ளது. இந்த சோதனைகள் கப்பல்களின் நிலை, ஏற்றும்-இறக்கும் நடைமுறைகள், தீயணைப்பு மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களின் செயல்திறன், மேலும் இயக்குநர்களின் அவசர நிலைத் தயார் நிலையை உள்ளடக்கும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படகுகள் மற்றும் பிற கப்பல்களில் பயணம் செய்பவர்கள் அடிப்படை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. பயணிகள் கப்பல்களின் வல்லுநர்கள் எப்போதும் விழிப்புடன் இருந்து, சரியான கண்காணிப்பு மேற்கொண்டு, பாதுகாப்பான வேகத்தைப் பராமரிக்க வேண்டும்.
மேலும், ஏற்றும்-இறக்கும் நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும், பயணம் தொடங்குவதற்கு முன் பாதுகாப்பு விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் MPA தெரிவித்துள்ளது. மோசமான வானிலையின் போது நீர்விளையாட்டு மற்றும் கடல்சார் செயல்பாடுகளை பொதுமக்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். நிலைமை பாதுகாப்பாக இல்லையெனில் அல்லது பயணிகள் தங்களுக்கும், பிறருக்கும் அபாயம் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தால், கப்பல்களின் வல்லுநர்கள் சேவை வழங்குவதை மறுக்கும் அதிகாரம் கொண்டுள்ளனர்.


