நாடு தழுவிய அளவில் திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன

8 ஏப்ரல் 2026, 3:55 AM
நாடு தழுவிய அளவில் திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன

கோலாலம்பூர், ஏப்ரல் 8: சமீபத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தினசரி பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.

இரண்டு ஹெக்டேருக்கும் அதிகமான பெரிய அளவிலான தீ விபத்துக்கள் தற்போது வெகுவாகக் குறைந்து, கிட்டத்தட்ட பூஜ்ஜியத்தை எட்டியுள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நோர் ஹிஷாம் முகமட்
தெரிவித்தார்.

“கடந்த வாரம், ஒரு நாளைக்கு 240-க்கும் மேற்பட்ட திறந்தவெளி எரிப்பு
சம்பவங்கள் பதிவாகின. ஆனால் இப்போது, ஒரு நாளைக்கு 119 முதல் 120 சம்பவங்கள் மட்டுமே பதிவாகின்றன,” என்று இன்று ஸ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் (BBP) சமூக தீயணைப்புக் கற்றல் மையத்தை (CFLC) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

நாட்டில் பல பகுதிகளில் ஏற்படும் திறந்தவெளி எரிப்பு சம்பவங்களுக்கு மனித நடவடிக்கைகளே முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

“சிலர் குப்பைகளை எரிப்பார்கள் அல்லது தோட்டத்தைச் சுத்தம் செய்வார்கள், பின்னர் தீ பரவிவிடும். சில சமயங்களில், விவசாய நிலங்களை
சீர் அமைப்பதற்காகச் செய்யப்படும் எரிப்பு நடவடிக்கைகள் பெரிய தீ விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன,” என்று கூறிய அவர், திறந்தவெளி எரிப்புகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 31 வரை, காடுகள், புதர்கள், தோட்டங்கள் மற்றும் பண்ணைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை 12,938 ஆக கடுமையாக அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.

இருப்பினும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவரும் பருவமழை மாற்றத்தால், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாளைக்குச் சுமார் 20 சம்பவங்கள் பதிவாகின்றன.

திறந்தவெளி எரிப்பு சம்பவங்களைக் கண்காணிப்பதுடன், மரம் முறிந்து விழும் சம்பவங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறும், அதற்கேற்ப தங்கள் செயல்பாட்டு முன்னுரிமைகளை மாற்றி அமைக்குமாறும் அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், சமூக தீயணைப்புக் கற்றல் மையங்களை (CFLC) நிறுவுவதன் மூலம் தீயணைப்புத் துறை பொதுக் கல்வி முயற்சிகளை வலுப்படுத்தி வருவதாக நோர் ஹிஷாம் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.