பெட்டாலிங் ஜெயா, மே 14: பூச்சோங், பண்டார் கின்ராராவில் உள்ள மழலையர் பள்ளி (Taska) ஒன்றில், ஏழு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக 28 வயது மழலையர் பள்ளி காப்பாளர் ஒருவர் மீது பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
சினார் ஹரியான் செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட பால்கிஷ் முகமட் டிசியான் (Balqish Mohammad Dzyhan) எனும் அந்தப் பெண்மணி, மஜிஸ்திரேட் ஃபாரா அசுரா முகமட் சாட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தலை அசைத்து புரிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
எனினும், கொலைக் குற்றச்சாட்டுகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மே 5-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.40 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், பண்டார் கின்ராராவில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் முகமட் ஈடன் ஃபஹீம் முகமட் நோர் ஷஃபிக் (Muhammad Eiden Faheem Mohammed Nor Syafiq) என்ற பச்சிளம் ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் 12 பிரம்படிகள் குறையாமல் தண்டனை வழங்கப்பட இச்சட்டம் வழிவகை செய்கிறது.
நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டது. மேலும், குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஜூலை 14-ஆம் தேதியை நீதிமன்றம் அடுத்தக் கட்ட விசாரணை நாளாக நிர்ணயித்துள்ளது.








