பூச்சோங் தீவைப்புச் சம்பவம்: 12 பேர் கைது

16 மார்ச் 2026, 3:38 AM
பூச்சோங் தீவைப்புச் சம்பவம்: 12 பேர் கைது

ஷா ஆலம், மார்ச் 16: கடந்த வாரம் பூச்சோங், தாமான் கின்ராரா குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த தீவைப்பு மற்றும் குற்றவியல் மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாக 12 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாகச் சிலாங்கூர் மாநில காவல்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த வழக்கு தற்போது தீர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இது குறித்து சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநிலக் காவல்துறை தலைமை அதிகாரி டத்தோ ஷாசெலி கஹார், 30 முதல் 40 வயதிற்குட்பட்ட 11 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 12 பேர் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேருக்கு இச்சம்பவத்தில் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சந்தேக நபரின் மனைவி உட்பட, எஞ்சிய ஐவர் காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி கைது நடவடிக்கைகள் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, சிலாங்கூர் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் செர்டாங் மாவட்டக் காவல்துறை தலைமையகம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் மூலம் கடந்த மார்ச் 12 முதல் நேற்று வரை பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனையின் போது, சந்தேக நபர்கள் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் டொயோட்டா வியோஸ், ஹோண்டா சிட்டி மற்றும் நிசான் அல்மேரா உட்பட மூன்று கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், 14 கைபேசிகள், ஒரு தலைக்கவசம் மற்றும் சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் காவல்துறையினர் ஆதாரங்களாகக் கைப்பற்றியுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.