கோலாலம்பூர், மே 14: நாட்டில் உள்ள சிறு வியாபாரிகள் மற்றும் வீதியோர வியாபாரிகள், நிதி உதவித் திட்டங்களில் குறைவாகப் பங்கேற்பதற்கான காரணத்தை கண்டறிய, அவர்களுடன் நேரடி கலந்துரையாடல்களை நடத்துமாறு அனைத்து அமைச்சுகளுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சரும், மடாணி அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான டத்தோ பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
'கசானா ஆய்வு நிறுவனம்' (KRI) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், பி.எஸ்.என் (BSN), தேக்குன் நேஷனல் (TEKUN) மற்றும் அமானா இக்தியார் மலேசியா (AIM) போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து வெறும் 5 விழுக்காடு சிறு வியாபாரிகள் மட்டுமே இதுவரை உதவி பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக, பல சிறு வியாபாரிகள் தங்களது வணிகத்தைப் முறையாகப் பதிவு செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வணிகப் பதிவு இல்லாததால் அரசாங்கத்தின் பல்வேறு நிதிச் சலுகைகளையும், கடனுதவிகளையும் அவர்களால் பெற முடியாமல் போவதாக பாஹ்மி சுட்டிக்காட்டினார்.
"வியாபாரிகள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் தடைகளைப் புரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் முறையான நிதி உதவிகளை விரிவுபடுத்தி, இந்தத் தரப்பினருக்குப் பயனுள்ள வகையில் கொண்டு சேர்க்க முடியும் என்று பிரதமர் கருதுகிறார்," என அங்காசாபுரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஹ்மி தெரிவித்தார்.
மற்றொரு முக்கிய அறிவிப்பாக, பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவின் (BHEUU) கீழ் 'மடாணி மத்தியஸ்தம் மையம்' தொடங்கப்பட உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது. இந்த மையம் 250,000 ரிங்கிட்டிற்கும் குறைவான மதிப்புள்ள வணிகப் பிரச்சனைகளுக்கு இலவசமாக (Pro bono) சேவைகளை வழங்கும்.
தற்போது 170-க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரிகள் இந்தப் பணிகளைக் கையாளத் தயாராக உள்ளனர். இந்த மையம் எதிர்வரும் மே 18-ஆம் தேதி தலைநகரில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் பாஹ்மி பாட்சில் மேலும் தெரிவித்தார்.








