கோலாலம்பூர், மே 14: தீபகற்ப மலேசியாவில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி எதிர்வரும் மே 20-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு டீசல் விலை லிட்டருக்கு 30 சென்கள் குறைக்கப்பட்டு RM4.87 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதன் விலை RM5.17 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், RON97 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 சென்கள் குறைக்கப்பட்டு RM4.70 ஆகவும், மானியமற்ற RON95 ரக பெட்ரோல் விலை 15 சென்கள் குறைக்கப்பட்டு RM3.87 ஆகவும் மாற்றமடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சிக்கு ஏற்ப, தானியங்கி விலை நிர்ணய முறையின் (APM) கீழ் இந்த விலை மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், மக்கள் மற்றும் சில குறிப்பிட்ட பொருளாதாரத் துறையினரைப் பாதுகாக்கும் நோக்கில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய விலைகளை அரசாங்கம் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இதன் அடிப்படையில், மானியம் பெறும் RON95 (BUDI95) விலை RM1.99 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவான் பகுதிகளில் டீசல் விலை RM2.15 ஆகவும் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்கிறது.
மேலும், மானிய விலையிலான பெட்ரோல் மற்றும் டீசல் கட்டுப்பாட்டு அமைப்புகளின் (SKPS & SKDS) கீழ் இயங்கும் வாகனங்களுக்கான விலைகளும் முறையே RM2.05 மற்றும் RM2.15 ஆகத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலை குறைப்பு பொதுமக்களுக்குச் சற்றே ஆறுதல் அளித்தாலும், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு முந்தைய விலையோடு ஒப்பிடுகையில் இது இன்னும் அதிகமாகவே உள்ளது.
போர்ச் சூழலுக்கு முன் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 60 முதல் 70 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 100 அமெரிக்க டாலர் வரை நீடிக்கிறது. போர் மண்டலங்களில் நிலவும் அபாயங்களால் காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதும், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சர்வதேசச் சந்தையில் நிலவும் இத்தகைய நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மடாணி அரசாங்கம் நாட்டு மக்களை எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், நாட்டின் நிதி நிலையைப் பாதுகாப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், தேவையற்ற விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சு தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது.








