தென்மேற்கு பருவக்காற்று தொடக்கம்: பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்

14 மே 2026, 1:29 AM
தென்மேற்கு பருவக்காற்று தொடக்கம்: பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்

கோலாலம்பூர், மே 14: மலேசியா இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவக்காற்று (Monsun Barat Daya) காலத்திற்குள் நுழையவுள்ள நிலையில், பொதுமக்கள் தற்போதைய வானிலை மாற்றங்கள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பருவ மாற்றத்தினால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின் அளவு குறைந்து, வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வறண்ட காலநிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், சுற்றுப்புறச் சூழல் மாசடைவதையும் புகைமூட்டத்தையும் தவிர்க்கும் வகையில் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அகமட் ஜாஹிட் ஹமிடி, வறண்ட வானிலை ஒருபுறம் இருந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதிகள், சரவாக்கின் வடக்கு மற்றும் சபாவின் மேற்கு பகுதிகளில் அதிகாலை வேளைகளில் 'ஸ்க்வால் லைன்' (Squall Line) எனப்படும் பலத்த காற்றுடன் கூடிய மழை பல மணிநேரம் நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்கள் வானிலை குறித்த அதிகாரப்பூர்வமான மற்றும் சரியான தகவல்களைப் பெறுவதற்கு மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (MetMalaysia) தளங்களை எப்போதும் கவனித்து வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

"இந்தக் காலக்கட்டத்தில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், நமது அன்றாடக் காரியங்கள் எவ்விதத் தடையுமின்றி அமையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.