ஷா ஆலம், மார்ச் 25: எதிர்வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி மே மாதம் வரை நாட்டில் பருவமழை மாற்றக் காலம் நிலவும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.
கடந்த நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழையின் முடிவை இந்தக் காலகட்டம் குறிப்பதாக அதன் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.
“இந்தப் பருவமழை மாற்றக் காலத்தின் போது, நாடு பல திசைகளிலிருந்து லேசான காற்றைப் பெறும்.”
“இந்தச் சூழல், குறுகிய காலத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வழிவகுக்கும்.”
“குறிப்பாக தீபகற்பத்தின் மேற்கு மற்றும் உள்பகுதிகள், சபா மற்றும் சரவாக்கின் மேற்குப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இத்தகைய வானிலை நிலவக்கூடும்,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வானிலை மாற்றத்தால் திடீர் வெள்ளம், மரங்கள் சாய்வது மற்றும் உறுதியற்ற கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் முகமட் ஹிஷாம் மேலும் கூறினார்.
எனவே, பொதுமக்கள் இந்தக் காலகட்டத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மெட்மலேசியா வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேல் விவரங்களுக்கு, பொதுமக்கள் மெட்மலேசியாவின் உதவி எண்ணான 1-300-22-1638 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்.








