ஷா ஆலாம், நவ 17-சிலாங்கூர் மாநிலத்தில், பருவமழையை எதிர்கொள்ளும் தயார்நிலையை வலுப்படுத்தும் வகையில், RM241.6 மில்லியன் மதிப்புள்ள மொத்தம் 34 வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் இதுவரை நிறைவடைந்துள்ளதாக மாநில உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் சுபாங் ஜெயாவின் சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் மெய் ஸீயின் கேள்விக்குப் பதிலளித்த அவர், மாநில அரசின் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி RM383.35 மில்லியன் மதிப்புள்ள மேலும் 39 கூடுதல் திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அத்துடன், மத்திய அரசின் கீழ் RM3.462 பில்லியன் ஒதுக்கீட்டில் 18 வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இது மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையேயான முழுமையான வெள்ள நிவாரண முயற்சிகளை நிறைவு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்ட, RM27.94 மில்லியன் மதிப்புள்ள 127 துரித நடவடிக்கை (quick win) திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டங்களில், நீர் ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கக் குளங்களைத் தூர்வாருதல் போன்ற பணிகள் உள்ளடங்கும்




