தரவு மையக் கட்டுமானத்தால் வெள்ளம் ஏற்படவில்லை - தாமான் மேடான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் விளக்கம்

13 மே 2026, 6:19 AM
தரவு மையக் கட்டுமானத்தால் வெள்ளம் ஏற்படவில்லை - தாமான் மேடான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் விளக்கம்

ஷா ஆலம், மே 13 - பெட்டாலிங் ஜெயாவில் கட்டப்பட்டு வரும் 'NEXTDC' கோலாலம்பூர் தரவு மையம் (KL1), ஜாலான் 223 மற்றும் செக்சன் 223 உணவக வளாகப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குக் காரணம் அல்ல என்று தாமான் மேடான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹலிமே அபு பாக்கார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து வெள்ளம் ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். மாநில உள்கட்டமைப்புத் துறைக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ), நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) மற்றும் பொதுப்பணித் துறை (JKR) அதிகாரிகள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

இது குறித்து ஹலிமே அபு பாக்கார் கூறுகையில், "உணவக வளாகம் மற்றும் ஜாலான் 223 பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்திற்கும், தரவு மையத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அங்கிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளம் ஏற்படுகிறது என்ற வாதம் தவறானது.

உண்மையில், கோலாலம்பூரிலிருந்து வரும் நீரோட்டத்தைச் சுங்கை பெஞ்சாலா (Sungai Penchala) ஆற்றால் தாங்க முடியாததே வெள்ளத்திற்கு முக்கியக் காரணமாகும். மேலும், சுங்கை கிள்ளான் ஆற்றில் நீர் அதிகரிப்பதும் இந்தச் சிக்கலை ஏற்படுத்துகிறது," என விளக்கமளித்தார்.

சிலாங்கூரில் நிலவும் நீர் பற்றாக்குறைக்கும், இந்தத் தரவு மையக் கட்டுமானத்திற்கும் முடிச்சுப் போட்டுப் பேசப்படும் புகார்களை அவர் முற்றாக மறுத்தார். மேலும், இந்தத் தரவு மையம் முறையான நிலப்பயன்பாட்டு விதிமுறைகளின் கீழ், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொழில்பேட்டை மண்டலத்திலேயே (Industrial Zone) கட்டப்பட்டு வருவதாகவும், இது குடியிருப்புப் பகுதி அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சைபர்ஜெயாவில் உள்ள தரவு மையங்களைப் போலவே, இந்தப் புதிய மையமும் சிலாங்கூர் மாநிலத்தின் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டுத் துறைக்குக் கூடுதல் மதிப்பைக் கூட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுவரை அந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து மக்களிடமிருந்து அதிகாரப்பூர்வப் புகார்கள் ஏதும் வரவில்லை என அவர் கூறினார். ஒருவேளை அதன் செயல்பாடுகளில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பது தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிக்கு அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.