ஷா ஆலம், மே 13 - உலக நாடுகளின் கடப்பிதழ் (Passport) வலிமையைத் தீர்மானிக்கும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index) சமீபத்திய தரவரிசையில், மலேசியக் கடப்பிதழ் உலகின் 6-வது இடத்தைப் பிடித்துப் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
மலேசியாவிற்கு கிடைத்துள்ள இந்த உலகளாவிய அங்கீகாரம், சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பறைசாற்றுவதாகக் கருதப்படுகிறது.
இது குறித்துச் சிலாங்கூர் குடிவரவுத் துறையின் மேலாண்மைத் துணை இயக்குநர் ரெட்மேன் சபார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், இந்தச் சாதனை சாதாரணமான ஒன்று அல்ல என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் 12-வது இடத்தில் இருந்த மலேசியா, இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டு முதல் ஆறு இடங்களுக்குள் நுழைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மலேசியா மட்டுமே இத்தகைய உயர் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் உலகின் 227 நாடுகளுள் 183 இடங்களுக்கு விசா இல்லாமல் அல்லது `ஓன் அரைவல்' (Visa on arrival) முறையில் மிக எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
இந்த உயர்வு குறித்து மேலும் பேசிய ரெட்மேன் சபார், மலேசியர்கள் இப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது முன்பை விட எளிதாகியுள்ளதாகவும், சர்வதேச அளவில் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மலேசியக் கடப்பிதழை வெறும் பயண ஆவணமாக மட்டும் பார்க்காமல், அது உலக அரங்கில் நமது நாட்டின் வலிமையையும் கௌரவத்தையும் பறைசாற்றும் ஒரு அடையாளமாகத் திகழ்கிறது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.







