கோலாலம்பூர், மே 13 - மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று நண்பகல் 12 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபகற்ப மலேசியா மட்டுமின்றி சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் பல பகுதிகளும் இந்த மோசமான வானிலை எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, தீபகற்ப மலேசியாவில் கெடாவின் லங்காவி தீவு, பினாங்கின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்கள், பேராக் மாநிலத்தின் மஞ்சோங், பாகான் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய இடங்களிலும், மலாக்கா மாநிலம் முழுவதிலும் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் மாநிலத்தில் தங்காக், மூவார், பத்து பஹாட் மற்றும் பொந்தியான் ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரவாக் மாநிலத்தில் ஜூலாவ், மெராடோங், சிபு, கனோவிட், காபிட், புக்கிட் மாபோங், சுபிஸ் மற்றும் மிரி ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சபாவில் உட்புறப் பகுதிகள், மேற்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் கூடாட் ஆகிய மாவட்டங்களுடன் லபுவான் கூட்டரசு பிரதேசத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மணி நேரமும் 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் போது அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது இத்தகைய இடி மின்னல் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
இது ஒரு குறுகிய கால எச்சரிக்கை என்பதால், வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே இது நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இந்த மோசமான வானிலை நிலவும் சூழலில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.







