பெட்டாலிங் ஜெயாவில் திடீர் வெள்ளம் - சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு

13 மே 2026, 2:09 AM
பெட்டாலிங் ஜெயாவில் திடீர் வெள்ளம் - சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு

ஷா ஆலம், மே 13 - பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் நிலவும் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குக் காரணமாகக் கருதப்படும் கால்வாய்களை மூடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) வீட்டு உரிமையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீர் வழித்தடங்களை மறைத்து அல்லது மூடி வைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களால் நீர் சீராக வெளியேற முடியாமல் தடைபடுவதாகப் பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் சஹ்ரி சாமிங்கோன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கனமழை பெய்யும் நேரங்களில் இத்தகைய தடைகள் வெள்ள அபாயத்தை அதிகரிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு விரைவில் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

"சில வீடுகளில் கால்வாய்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அவற்றின் அடியில் நாம் பார்க்க முடியாத வகையில் அடைப்புகள் ஏற்பட்டு, நீர் ஓட்டத்தை அது பாதிக்கக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

பொதுவாக, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 60 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு இருந்தால், நமது தற்போதைய கால்வாய் அமைப்பால் அந்த நீரைத் தாங்க முடியாது," என்று அவர் விளக்கமளித்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளச் சேதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜாலான் 223, செக்சன் 51A-இல் உள்ள உணவக வளாகத்தில் இருந்த 60-க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இரண்டு முறை வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவும் வகையில், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான கடை வாடகையை மாநகராட்சி தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், அவர்கள் விருப்பப்பட்டால் மாற்று இடத்திற்குச் செல்லவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், அந்தப் பகுதி வியாபார ரீதியாக மிகவும் பிரபலமானது என்பதால், அங்கேயே தொடர்ந்து இருக்க வியாபாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வியாபாரிகளை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் வெள்ள அபாய எச்சரிக்கை சைரன்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) மாநகராட்சி அந்தப் பகுதியில் நிறுவியுள்ளது.

பொதுமக்களும் வியாபாரிகளும் மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, நீர் வழித்தடங்களைச் சீராக வைத்திருக்க உதவ வேண்டும் என்று மேயர் கேட்டுக்கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.