கிளந்தான், மே 8 - கடந்த வாரம் கிளந்தான், கெத்தேரே பகுதியில் 61 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய இரண்டு இளைஞர்களுக்கு தடுப்பு மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நீட்டிப்பு உத்தரவை கோத்தா பாரு நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராய்ஸ் இம்ரான் ஹமீட் இன்று பிறப்பித்தார். இதன் மூலம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை அந்த இளைஞர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 302-இன் கீழ் கொலைக் குற்றமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக, பலத்த பாதுகாப்புடன் இன்று காலை சுமார் 8.50 மணியளவில் காவல்துறையினரின் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட இவ்விரு சந்தேக நபர்களும் கோத்தா பாரு நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த மே மாதம் 1-ஆம் தேதி நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில், நூர்ஃபிஸ்யா சுல்கிஃப்லி என்ற 19 வயது இளம்பெண் கம்போங் சிமாவில் உள்ள ஒரு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலில் முகம் முதல் கால் வரை மொத்தம் 61 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததாகக் கிளந்தான் மாநிலத் தலைமை காவல்துறை அதிகாரி டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்திருந்தார். குறிப்பாக, அவரது உடலின் வலது பக்கத்தில் அதிகப்படியான காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, ஒரு முதிய தம்பதியினர் உட்பட மேலும் நான்கு பேர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருப்பினும், அந்தத் தம்பதியினர் காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த இரண்டு இளைஞர்களிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயங்கரமான கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்துப் பல கோணங்களில் காவல்துறையினர் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.








