கோலாலம்பூர், மே 7: மலேசியாவிலுள்ள தாய்மார்களில் சுமார் 66 சதவீதத்தினர் தங்களுக்கென போதிய நேரத்தை ஒதுக்க முடியாமல், குடும்பம் மற்றும் பணிச்சுமையால் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்காலத் தாய்மார்கள் வெறும் இல்லத்தரசிகளாகவோ அல்லது பிள்ளைகளை வளர்ப்பவர்களாகவோ மட்டும் இல்லாமல், பன்முகப் பொறுப்புகளைச் சுமக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதை இது காட்டுவதாக அந்த வாரியத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரோஹானி அப்துல் கரீம் கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று பெர்னாமா தொலைக்காட்சியின் 'காசே லென்சா கெலுவார்கா' (KASIH Lensa Keluarga) எனும் நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ஒரு குடும்பத்தின் அச்சாணியாகவும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குபவர்களாகவும் தாய்மார்கள் திகழ்கின்றனர் என்றார்.
எனினும், இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றும் வேளையில் அவர்கள் தங்களின் சொந்த நலனைத் தியாகம் செய்வதோடு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் சோர்வுக்கு (Burnout) ஆளாகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் மே 10-ஆம் தேதி கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTC) நடைபெறவுள்ள '2026-ஆம் ஆண்டுக்கான தேசியத் தாய்மார் தினக் கொண்டாட்டம்' மிகவும் வித்தியாசமான முறையில் அமையவுள்ளது.
"தாயின் அன்பு உறுதிமிக்கது" (Seteguh KASIH Ibu) எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த விழா, வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், பெண்களின் உணர்ச்சி மற்றும் மன நலனை மேம்படுத்தும் ஒரு முக்கியத் தளமாக விளங்கும் என்று டத்தோ ஸ்ரீ ரோஹானி உறுதியளித்தார்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாய்மார்களின் ஒட்டுமொத்த நலனுக்காக ஆரோக்கியம், உணர்ச்சி மற்றும் மனநலம் என மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதில் 'பாக்கேச் சாயாங் இபு' (Pakej Sayang Ibu) திட்டத்தின் கீழ் பெண்களுக்குத் தேவைப்படும் எச்.பி.வி டி.என்.ஏ (HPV DNA) பரிசோதனைகள், மேமோகிராம் மானியம் மற்றும் கருவுறுதல் சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், 'பாக்கேச் ஜாலினான் காசே இபு' (Pakej Jalinan KASIH Ibu) திட்டத்தின் வழி கலைச் சிகிச்சை மற்றும் நகைச்சுவைச் சிகிச்சை போன்ற நடவடிக்கைகள் மூலம் குடும்ப உறவுகளை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
அதேவேளையில், 'பாக்கேச் மிண்டா தெனாங்' (Pakej Minda Tenang) திட்டம் தாய்மார்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மசாஜ் சேவைகள் மற்றும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பயிற்சிகளையும் வழங்கும். இந்தச் சேவைகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள எல்.பி.பி.கே.என். குடும்ப மையங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதைத் தவிர, கருவுறுதலுக்காகக் காத்திருக்கும் பெண்களுக்காக 'இரு கோடுகள் போராளிகள்' (Pejuang Dua Garisan) எனும் சிறப்பு மன்றமும், எல்.பி.பி.கே.என். கருவுறுதல் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வெற்றி கண்ட பெண்களைக் கௌரவிக்கும் வகையில் 'இன்ஸ்பிராசி இபு' (Anugerah Khas Inspirasi Ibu) எனும் சிறப்பு விருதும் இந்த விழாவில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.








