ஷா ஆலம், மே 6: ஜோகூர், பரிட் சுலோங்கில் உள்ள ஸ்ரீ மைமோன் தேசியப் பள்ளிக்கு முன்னால் நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டாம் ஆண்டு மாணவி நூர் ஐனி உமைரா முகமட் ஃபாரீஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் விபத்து நிகழ்ந்த உடனேயே 60 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகப் பத்து பகாட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ஷாருலனுவார் முஷத்தாத் அப்துல்லா சானி இது குறித்து விடுத்த அறிக்கையில், தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 41(1)-ன் கீழ் (அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணத்தை ஏற்படுத்துதல்) இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகிறது.
பள்ளி வளாகத்திற்குள் பொருட்களை விநியோகித்துவிட்டு, வேன் ஓட்டுநர் முதன்மை நுழைவாயில் வழியாக வெளியேற முயன்றபோது, அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த எட்டு வயது சிறுமி நூர் ஐனி மீது வேன் மோதியது என காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இந்த விபத்தில் சிறுமியின் தலை மற்றும் உட்புற உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதற்கிடையில், உயிரிழந்த சிறுமி நூர் ஐனியின் உடல் நேற்று இரவு 8.35 மணியளவில், பரிட் சுலோங்கில் உள்ள கம்போங் பரிட் முஸ்தபா இஸ்லாமிய மயானத்தில் அவரது பாட்டியின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
நூற்றுக்கணக்கான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்ற இந்த இறுதிச் சடங்கில் சோகம் மேலோங்கி காணப்பட்டது.
இரண்டு பிள்ளைகளில் மூத்தவரான நூர் ஐனியின் பிரிவைத் தாங்க முடியாமல், அவரது தாயார் அஸ்மிலா துக்கிரான் (37 வயது) மருத்துவமனையில் உடல் கூறாய்வு முடிவுக்காகக் காத்திருந்தபோது பலமுறை மயக்கமடைந்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.








