ஷா ஆலம், மே 1 - மலேசியாவில் தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்புகள் வலுவாக இருந்தாலும், பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது என வழக்கறிஞர் எஸ்தர் தமிழ் செல்வம் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இந்திய தொழிலாளர்களிடையே தொழில் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக காணப்படுவது ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையாக அவர் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை அறிந்திருக்காத நிலையில், அந்த உரிமைகள் நடைமுறையில் பாதுகாக்கப் படுவதும் சிரமமாகி விடுகிறது. தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களில் முக்கியமானவை உரிமைகள் பற்றிய அறியாமை மற்றும் அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காத மனப்பான்மை ஆகும்.
பலர் ஒப்பந்தக் கடிதம் பெறாமல் வேலை செய்வதும், ஓய்வூதிய சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் காப்பீடு போன்ற அடிப்படை அம்சங்கள் குறித்து போதுமான அறிவு இல்லாமல் இருப்பதும் கவலைக்குரியது. மனிதவள மேலாண்மை குறைபாடுகள், சட்ட விழிப்புணர்வு இல்லாமை, மற்றும் தொழிலாளர்களின் பயம் ஆகியவை சம்பளம், ஓய்வூதியம், காப்பீடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.
நகர்ப்புற வாழ்க்கை செலவுகள் அதிகமாக இருப்பதும் தொழிலாளர்களை பொருளாதார அழுத்தத்திற்கு தள்ளுகிறது; இதனால் வேலை இழப்பை அஞ்சித் தங்கள் மீது நிகழும் அநீதிகளை பலர் அமைதியாக சகித்துக் கொள்கின்றனர். இந்த நிலைமை ஒரு குறிப்பிட்ட தலைமுறையினருக்கு மட்டும் அல்லாமல் அனைத்து வயதினரிடமும் காணப்படுகிறது.
எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் குறைவாகவும், உடனடி தேவைகள் மட்டுமே முன்னிலைப்படுத்தும் குறுகிய எண்ணங்களும் இதற்குக் காரணமாக அமைகின்றன என எஸ்தர் விளக்கினார்.
வேலை இடங்களில் பிரச்சனைகள் எழும் போது தொழிலாளர்கள் உணர்ச்சிவசப்படாமல் அவற்றைக் களைய அறிவு பூர்வமாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

முதலில் அவர்கள் தங்களின் குறைகளை நிரூபிக்க தேவையான ஆதார ஆவணங்களைச் சேகரிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் புகார்கள் செல்லுபடியாகாமல் போகும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது.
அதன் பின்னர், நிறுவனத்தின் மனிதவளத் துறையை அணுகி ஆதாரங்களுடன் பிரச்சனையை முன் வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால் தொழிலாளர் துறையை நேரடியாக அணுகலாம். தேவையானபோது வழக்கறிஞர்களின் ஆலோசனையையும் பெறலாம்; இறுதியாக நீதிமன்றத்தின் உதவியையும் நாட முடியும்.
மலேசியாவில் தொழிலாளர்களுக்கு சட்ட உதவி மிகவும் அவசியமானதாக இருக்கும் சூழலில், Malaysian Bar சட்ட உதவி மையங்கள் முக்கிய ஆதரவாக செயல்படுகின்றன. வேலை இடங்களில் சம்பள நிலுவை, அநியாய பணி நீக்கம், கூடுதல் நேரச் சம்பளம் வழங்காமை, ஒப்பந்த மீறல், அல்லது பணியிடத் தொந்தரவு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள், இந்த மையங்களின் மூலம் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் சட்ட ஆலோசனை பெற முடியும். இது தொழிலாளர்களுக்கு தங்களின் உரிமைகளை புரிந்து கொள்ளவும், எந்த சட்டத்தின் கீழ் தங்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை அறியவும் உதவுகிறது.
மேலும், இந்த மையங்களில் உள்ள தன்னார்வ வழக்கறிஞர்கள் தொழிலாளர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தயாரிக்க உதவுவதோடு, தொழிலாளர் துறை அல்லது நீதிமன்றத்தில் புகார் அளிக்கும் முறைகள் பற்றியும் வழிகாட்டுகின்றனர். பொருளாதார காரணங்களால் வழக்கறிஞரை அணுக முடியாமல் இருப்பவர்கள் கூட, இவ்வகை சேவைகளின் மூலம் தங்களின் பிரச்சனைகளை சட்டப்படி முன்னெடுத்து செல்ல முடிகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் அநீதிக்கு எதிராக நியாயமான முறையில் போராடுவதற்கான நம்பிக்கையும் ஆதாரமும் பெறுகின்றனர்.
கூடுதலாக, மலேசிய மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்திய “Working For Workers (WFW)” செயலியும் தொழிலாளர்களுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக உள்ளது. இந்த டிஜிட்டல் தளம் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அச்சமின்றி தங்களின் பணியிடப் புகார்களைப் பதிவு செய்ய முடிகிறது. இது தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முன்னேற்றமான முயற்சியாக கருதப்படுகிறது.
வேலைவாய்ப்பு சட்டம் 1955 இல் செய்யப்பட்ட சமீபத்திய திருத்தங்கள் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 98 நாட்களாக நீட்டிக்கப் பட்டுள்ளதுடன், ஆண்களுக்கு ஏழு நாட்கள் தந்தை விடுப்பும் வழங்கப் பட்டுள்ளது. மேலும், நெகிழ்வான வேலை முறைக்கு விண்ணப்பிக்கும் உரிமையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வேலையிடங்களில் இனம், மதம், பாலினம் போன்ற அடிப்படைகளில் எந்தவித பாகுபாடும் இன்றி சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது சட்டத்தால் வலியுறுத்தப்படுகிறது. வேலையிடங்களில் பகடிவதை அல்லது தொந்தரவு ஏற்பட்டால், நிறுவனத்திடம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், தேவையான பட்சத்தில் காவல் துறையிலும் புகார் அளிக்கலாம்.
அதுமட்டுமில்லாமல், கிக் தொழிலாளர்களை பாதுகாக்கும் புதிய சட்டமும் 2025ஆம் ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் அதிகமாக தொழில் மயமாக்கப்பட்ட மற்றும் நகர்மயமாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், இங்கு பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பெருமளவில் இங்கு திரளுகின்றனர். இந்த அதிகப்படியான தொழிலாளர் போட்டி காரணமாகப், பலர் குறைந்த சம்பளம், ஒப்பந்தமின்றி வேலை செய்வது மற்றும் கூடுதல் நேரச் சம்பளம் இல்லாமை போன்ற சலுகையற்ற நிபந்தனைகளையும் ஏற்க வேண்டிய நிலை உருவாகிறது. குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மொழி தடைகள் மற்றும் சட்ட அறிவு இல்லாமை காரணமாக தங்களின் உரிமைகளை வலியுறுத்த முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
சிலாங்கூரில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால், அவை அனைத்தும் தொழிலாளர் சட்டங்களை முழுமையாகப் பின்பற்றுவது சவாலாக உள்ளது. இதற்கிடையில், கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் தொழிலாளர் உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சில நிறுவனங்கள் கூடுதல் நேரச் சம்பளம் வழங்காதது, ஓய்வூதிய சேமிப்பு தொகைகளை முறையாக செலுத்தாதது மற்றும் காப்பீடு அல்லது பாதுகாப்பு வசதிகளை வழங்காதது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு சட்டத்தின் கீழ் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் போதுமான வளங்களின் குறைபாடு மற்றும் சட்ட விழிப்புணர்வு இல்லாமை காரணமாக இப்படிப்பட்ட பிரச்சனைகள் அதிகம் இடம்பெறுகின்றன என எஸ்தர் குறிப்பிட்டார்.
மக்களின் நலனைப் பாதுகாக்க பல சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதில் குறைபாடு உள்ளது. பலர் பயம் காரணமாக தங்களுக்கு நிகழும் அநீதிகளை எதிர்கொள்ளாமல் அமைதியாக ஏற்றுக்கொள்வதும் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, “நம்மை நாமே மதிக்க கற்றுக்கொண்டால் மட்டுமே அநீதிக்கு எதிராக தைரியமாக நிற்க முடியும்” என கூறி எஸ்தர் தமிழ்ச்செல்வம் தொழிலாளர்களுக்குத் தனது தொழிலாளர் தின வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.







