புஞ்சாக் ஆலாமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத்   தேடும் பணி தொடர்கிறது

30 ஏப்ரல் 2026, 3:21 AM
புஞ்சாக் ஆலாமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத்   தேடும் பணி தொடர்கிறது

ஷா ஆலம், ஏப்ரல் 30 – புஞ்சாக் ஆலம், ஃபாசா 3-இல் உள்ள கால்வாயில் ஏற்பட்ட கனத்த வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவனைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி சிறுவன் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.

இச்சம்பவம் குறித்த தகவலை NG999 அழைப்பு மூலம் நேற்று இரவு 7.10 மணியளவில் பெற்றதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர், சூப்பரின்டெண்டன்ட் முகமது ஹஃபிஸ் முகமது நூர் தெரிவித்தார். தகவலை அடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் உடனடியாகத் தொடங்கப் பட்டன.

கைரில் இஸானி கைஸாலுல்லுனுடின் என அடையாளம் காணப்பட்ட அச்சிறுவன், கடைசியாக எட்டு என்ற எண் பொறிக்கப்பட்ட பச்சை நிற ஜெர்சி மற்றும் கருப்பு நிற நீளக்காற்சட்டை அணிந்திருந்ததாக அவர் கூறினார்.

"நேற்று பிற்பகல் 3 மணியளவில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது, புஞ்சாக் ஆலம் ஃபாசா 3 மைதானத்தில் 11 மற்றும் 12 வயதுடைய தனது இரண்டு நண்பர்களுடன் அச்சிறுவன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது."

"அவனது நண்பர்களின் கூற்றுப்படி, சிறுவன் மைதானத்திற்கு அருகிலுள்ள கால்வாய்க்கு என்ன காரணத்திற்காகச் சென்றான் என்பது தெரியவில்லை. அப்போது அவன் கால்வாயில் தவறி விழுந்து வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப் பட்டான்," என்று முகமது ஹஃபிஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் எவ்வித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்றும், இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது 03-6156 1222 என்ற எண்ணில் சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் ஹாட்லைனையோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

"விசாரணை அதிகாரியான சார்ஜன் மேஜர் ஃபுஸி கமாஸானை 012-3818167 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.