ஷா ஆலாம், மார்ச் 11: ஷாபு மற்றும் கஞ்சா பூ வகைப் போதைப்பொருட்களை விநியோகித்த இரண்டு கும்பல்கள், மார்ச் 3 முதல் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நான்கு தொடர் சோதனைகளில் முறியடிக்கப் பட்டன.
இதன் விளைவாக, RM 14.6 மில்லியன் மதிப்புள்ள 221.4 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிலாங்கூர் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN), கோம்பாக் மாவட்ட போதைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA), சிப்பாங் மற்றும் மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் துணைப் போலீசாரின் கூட்டு நடவடிக்கையில் இந்த வெற்றி சாத்தியமானது.
இதில், ஒரு உள்நாட்டு ஆடவர் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் கூறுகையில், முதல் வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதுடன், RM9.35 மில்லியன் மதிப்புள்ள 116.3 கிலோகிராம் கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
அவரது கூற்றுப்படி, மார்ச் 3-ஆம் தேதி, வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தும் சந்தேகத்தின் பேரில் ஒரு ஆடவர் கேஎல்ஐஏ-வில் தடுத்து வைக்கப்பட்டார்.
அவரது பயணப் பையில் 49 பொட்டலங்களில் 27.2 கிலோகிராம் கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் காய்ந்த இலைகள் இருந்தன.
"அந்தக் கைதைத் தொடர்ந்து, மார்ச் 4-ஆம் தேதி, இந்தக் கும்பலின் முக்கிய சூத்திரதாரி என நம்பப்படும் மற்றொரு வெளிநாட்டு ஆடவர், சிப்பாங், கோத்தா வாரிசானில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 14.3 கிலோகிராம் கஞ்சா பூக்கள் அடங்கிய 25 பொட்டலங்கள் கொண்ட ஒரு பயணப் பை பறிமுதல் செய்யப்பட்டது.
"விசாரணையின் விளைவாக, கோலாலம்பூர், மோடாண்ட் கியாராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஐந்து பயணப் பைகளில் 74.8 கிலோகிராம் கஞ்சா பூக்கள் அடங்கிய 136 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன," என்று அவர் இன்று சிலாங்கூர் காவல் துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை அட்டையைப் பயன்படுத்தி கடந்த டிசம்பர் முதல் கடந்த மாதத்தின் நடுப் பகுதிக்குள் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.அனைவரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் வெளிநாட்டுச் சந்தைக்கானது என்றும் நம்பப்படுகிறது.
"போலீசார் இரண்டு கார்கள், சொகுசு கடிகாரம் உட்பட இரண்டு கைக்கடிகாரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்," என்றார் அவர்.
மற்றொரு தனி வழக்கில், கோம்பாக் பகுதியில் ஒரு உள்நாட்டு ஆடவர் மற்றும் ஒரு வெளிநாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 'Daguanyin' என எழுதப்பட்ட 64 பிளாஸ்டிக் பொட்டலங்களில் இருந்த 105.1 கிலோகிராம் ஷாபு போதைப்பொருள் ஐந்து கேன்வாஸ் பைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய நிசான் வேனின் பின்புறத்தில் இருந்து RM5.25 மில்லியன் மதிப்புள்ள இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
"சோதனையில், 34 வயதான உள்நாட்டு சந்தேக நபர் ஒரு கூரியர் நிறுவனத்தில் விநியோகஸ்தராக பணிபுரிவது, அவருக்குப் போதைப்பொருள் தொடர்பான மூன்று குற்றப் பதிவுகள் இருப்பதும் தெரியவந்தது."
"பத்துமலைப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பணிபுரியும் 47 வயதான மற்றொரு வெளிநாட்டு சந்தேக நபருக்கு மலேசியாவில் எந்த விதமான குற்றப் பதிவுகளும் இல்லை," என்றார்.
இந்தப் போதைப்பொருள் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதி சந்தைக்காகக் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட கும்பல் கடந்த மாதம் முதல் தீவிரமாக இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த இரு வழக்குகளும் அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றன.








