சுக்மா 2026 திட்டமிட்டபடி தொடரும்: சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலுக்கு பினாங்கு அரசு நன்றியைத் தெரிவித்தது

27 ஏப்ரல் 2026, 4:07 AM
சுக்மா 2026  திட்டமிட்டபடி தொடரும்: சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலுக்கு பினாங்கு அரசு நன்றியைத் தெரிவித்தது

ஷா ஆலம், ஏப்ரல் 27 - எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டிகள் (சுக்மா) திட்டமிட்டபடி தொடர, சிலாங்கூர் சுல்தான் அவர்கள் வழங்கிய ஒப்புதலுக்கு பினாங்கு மாநில அரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பினாங்கு மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை நிர்வாகக் குழு உறுப்பினர் டேனியல் கூ ஜி சென், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரின் நேற்றைய அறிவிப்பு ஒரு மிகச்சிறந்த நேர்மறையான வளர்ச்சியாகும் என்று புகழாரம் சூட்டினார்.

இந்த அறிவிப்பின் மூலம் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளும், அவர்கள் நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த முன்னேற்பாடுகளும் எவ்விதத் தடங்கலும் இன்றி திட்டமிட்டபடி தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தப் போட்டிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்த பிரதமர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் அவர் தனது நன்றிகளைப் புலப்படுத்தினார்.

இவ்விவகாரம் குறித்துப் பேசிய பினாங்கு மாநில விளையாட்டு மன்றத்தின் (MSN) இயக்குநர் ஹாரி சாய் ஹெங் ஹுவா, நாட்டின் விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்கு இத்தகைய இரு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

தற்போதைய சூழலில் மிகவும் ஆடம்பரமான ஏற்பாடுகள் இன்றி, சிக்கனமான முறையிலேயே போட்டிகளை நடத்துவது போதுமானது என்றும், விளையாட்டுத் தளங்கள் வீரர்களுக்காகத் திறக்கப்படுவதும் செலவினங்களை முறையாகக் கையாள்வதும் மட்டுமே தற்போதைய இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழல் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஷா ஆலாம் விளையாட்டரங்கம் முழுமையாகச் கட்டி முடிக்கப்படும் வரை 2026 சுக்மா போட்டிகளைத் தள்ளிவைக்க சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் ஆலோசனைக் கூறியிருந்தார்.

இருப்பினும், இது தொடர்பாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய விரிவான விளக்கத்தைத் தொடர்ந்து, சிக்கனமான முறையிலும் பொறுப்புணர்வுடனும் போட்டிகளைத் தொடர மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்கள் நேற்று தமது ஒப்புதலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

22-வது சுக்மா போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில், பாரா சுக்மா போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் 37 வகையான விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 474 போட்டிகள், மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 52 விளையாட்டுத் தளங்களில் அரங்கேறவுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.