காஜாங், 13 ஜூலை – 22-ஆவது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (SUKMA) சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களின் இறுதிப் பட்டியல் எதிர்வரும் ஜூலை 25-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
வீரர்களின் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (MSN) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக, சில தொழில்நுட்ப விவரங்கள் விளையாட்டு சங்கங்கள் மற்றும் நிர்வாகத் தரப்புடன் இணைந்து சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதுவரை அனைத்து விவகாரங்களும் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை அறிமுகப்படுத்துவதற்கும், சிலாங்கூர் பாசறைக்கு மாநிலக் கொடியை வழங்குவதற்குமான அதிகாரப்பூர்வ நிகழ்விற்காக மட்டுமே தற்போது காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதே வேளையில், குறைந்தபட்சம் ஆறு மாநிலங்கள் பங்கேற்க வேண்டும் என்ற தகுதி விதியை நிறைவு செய்யத் தவறியதால், 'ஆர்டிஸ்டிக் நீச்சல்' (Artistic Swimming) மற்றும் 'ரேபிட் பயர் குழு பிரிவு' (Rapid Fire) ஆகிய இரண்டு போட்டிகள் சுக்மாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நஜ்வான் தெரிவித்தார்.
மலேசிய விளையாட்டுப் போட்டிகள் (SUKMA) எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சுக்மா (PARA SUKMA) போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 5 முதல் 14 வரையிலும் சிலாங்கூரில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.







