முதியோர்களுக்கான சுகாதாரப் பரிசோதனை திட்டம்: சிலாங்கூர் மாநில அரசு

23 ஏப்ரல் 2026, 1:59 AM
முதியோர்களுக்கான சுகாதாரப் பரிசோதனை திட்டம்: சிலாங்கூர் மாநில அரசு

ஷா ஆலம், ஏப்ரல் 23: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முதியோர்களின் நலனைப் பாதுகாக்கவும், பரவா நோய்களை (NCD) முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க மாநில அரசு தனது சுகாதாரப் பரிசோதனைத் திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

முதியோர் மத்தியில் நாள்பட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், மிகவும் மூலோபாயமான மற்றும் தொடர்ச்சியான அணுகுமுறை அவசியமாகிறது என்று மாநில பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முதியோர் சுகாதாரத் திட்டம் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 1,953 முதியோர்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் வெறும் பரிசோதனையோடு மட்டும் நின்றுவிடாமல், சமூகத்தின் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று சேவையாற்றும் ‘அவுட்ரீச்’ (Outreach) முறையில் அமையப்பெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நோய்களைத் தடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள், முறையான உடற்பயிற்சிகள், பிரத்யேகப் பிசியோதெரபி சிகிச்சைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு உரைகள் மூன்று மாதக் காலத்திற்குத் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

மாநில அரசின் 'சிலாங்கூர் சாரிங்' (Selangor Saring) திட்டத்தைப் பாராட்டிய ஜமாலியா, இத்திட்டத்தின் கீழ் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு இலவசப் பரிசோதனைகள் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் சமூகத்தின் அனைத்துத் தரப்பு முதியோர்களும் தரமான மருத்துவச் சேவையைப் பெறுவதை மாநில அரசு உறுதி செய்கிறது.

அண்மையில் வெளியான 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை ஆய்வு (NHMS) முடிவுகள் கவலையளிக்கும் விதமாக உள்ளன.

அந்த அறிக்கையின்படி, மலேசியாவில் 39 சதவீத முதியோர்கள் நீரிழிவு நோயாலும், 73 சதவீதத்தினர் உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 68 சதவீத முதியோர்களுக்குக் குறைந்தது இரண்டு நாள்பட்ட நோய்கள் இருப்பதும், 30.6 சதவீதத்தினர் போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.