சுக்மா 2026 : சிறிய அளவிலாவது போட்டிகளை நடத்த கிளந்தான் அரசு கோரிக்கை

22 ஏப்ரல் 2026, 8:41 AM
சுக்மா 2026 : சிறிய அளவிலாவது போட்டிகளை நடத்த கிளந்தான் அரசு கோரிக்கை

கோத்தா பாரு, ஏப்ரல் 22 - சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டிகள் (சுக்மா), சிறிய அளவிலாவது நடத்தப்பட வேண்டும் என கிளந்தான் மாநில அரசு தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

இப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டால், அது விளையாட்டு வீரர்களின் செயல்திறன் மற்றும் மன உறுதியை நேரடியாகப் பாதிக்கும் என மாநில அரசு கவலை கொண்டுள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிளந்தான் மாநில இளைஞர், விளையாட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஸாமக்ஷாரி முகமட், 2024-ஆம் ஆண்டு சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டிகள் முடிந்தது முதல், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்கள் மாநில வீரர்கள் தீவிரமாகத் தயாராகி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

இதற்காகப் பெரும் அளவிலான நேரம், உழைப்பு மற்றும் நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"திராங்கானு மாநிலம் முன்வைத்துள்ள கருத்தைப் போலவே, சுக்மா போட்டிகள் சிறிய அளவிலாவது தொடர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இருப்பினும், சிலாங்கூர் சுல்தான் அவர்களின் கட்டளைக்கு நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கிறோம்," என அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற சுக்மா உயர்மட்டக் குழுக் கூட்டத்திலும், சிக்கன நடவடிக்கைகளுடன் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

முன்னதாக, உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடி மற்றும் ஷா ஆலம் ஸ்டேடியம் மறுசீரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததைக் கருத்தில் கொண்டு, 2026 சுக்மா போட்டிகளை ஒத்திவைப்பதே சிறந்தது எனச் சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் கடந்த திங்கட்கிழமை கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்பிக் ஜோஹாரி பேசுகையில், பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்காமல், செலவுகளைக் குறைக்கும் வகையில் சிறிய அளவில் இப்போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

திட்டமிட்டபடி நடந்தால், சுக்மா 2026 போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.