ஷா ஆலம், ஏப்ரல் 6 - மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) உதவி ஒதுக்கீட்டை 40 விழுக்காடு வரை அதிகரிக்க சிலாங்கூர் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
பாதிக்கப்படக்கூடிய குழுவினரின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் செயல் மன்றத்தின் (MTOS) தலைவர் டேனியல் அல்-ரஷீத் ஹரோன் கூறினார். குறிப்பாக, மேற்கு ஆசிய மோதல் நீடித்தால் ஏற்படக்கூடிய வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்ள இது உதவும் என்றார்.
"உதவி பெறுநர்களின் ஒதுக்கீட்டை 30 அல்லது 40 விழுக்காடு வரை அதிகரிப்பது உட்பட, தற்போதுள்ள ஒதுக்கீட்டை நாங்கள் மறுஆய்வு செய்து வருகிறோம்."
"மேலும், விழாக்கள் போன்ற அவசரமற்ற நிகழ்வுகளைத் தள்ளிவைத்து, உணவு மற்றும் மக்களின் அன்றாடத் தேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துவோம்" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
அதே வேளையில், அனாக் இஸ்திமேவா சிலாங்கூர் (ANIS) முன்முயற்சி மூலம் வழங்கப்படும் உதவியை மாநில அரசு மறுசீரமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும், MTOS கீழ் 650,000 ரிங்கிட் ஒதுக்கீடும் உள்ளது.
"இந்த ஒதுக்கீடுகள் மறுசீரமைக்கப்படும். உதவிகள் நேரடியாகப் பெறுநர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் விநியோக முறைகளும் ஆராயப்படும்," என்று அவர் விளக்கினார்.
இந்த புதிய அணுகுமுறை, முந்தைய முறைகளைக் காட்டிலும் நேரடி உதவி வழங்குவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
பத்து திகா சட்டமன்ற உறுப்பினருமான அவர், சிலாங்கூரில் சுமார் 150,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். ஆனால் குறைந்த வருமானம் பெறும் பாதிக்கப்படக்கூடிய குழுவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
"சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்," என்றார்.
மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நிர்ணயித்தபடி, இந்த மறுசீரமைப்புக்கான முன்மொழிவு 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வீட்டில் இருந்து வேலை செய்வது உட்பட, 'கிக்' பொருளாதாரத் தளங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதல் வேலை வாய்ப்புகளை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
"அவர்கள் கூடுதல் வருமானம் ஈட்ட உதவும் வகையில், வீட்டில் இருந்து செய்யக்கூடிய நெகிழ்வான வேலை வாய்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.








