சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘BRAIS 2026’ புதிய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்

17 மே 2026, 2:56 AM
சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘BRAIS 2026’ புதிய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்

ஷா ஆலம், மே 17 – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் (OKU) நலனைப் பேணவும், அவர்களுக்கான ஆதரவுத் திட்டங்களை விரிவுபடுத்தவும் ‘பந்துவான் ரஹ்மா இன்சான் இஸ்திமேவா சிலாங்கூர்’ (BRAIS 2026) எனும் புதிய திட்டத்தைச் சிலாங்கூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மாநில மகளிர் மேம்பாடு மற்றும் நலன்புரித் துறைக்கான செயற்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி இத்திட்டம் குறித்துப் பேசுகையில், ‘யாயாசான் இன்சான் இஸ்திமேவா சிலாங்கூர்’ (YANIS) அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டமானது, இதற்கு முன்னர் செயல்பாட்டில் இருந்த ‘அனிஸ்’ (ANIS) திட்டத்தின் மறுவடிவமாகும் என்று குறிப்பிட்டார்.

மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இன்னும் விரிவான மற்றும் உயர்தர மேம்பாட்டை வழங்கும் நோக்கில் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ‘BRAIS 2026’ திட்டத்தின் கீழ் பல முக்கிய மேம்பாடுகளும் புதிய சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் அவர்களுக்கு உகந்த கழிவறை வசதிகளை அமைப்பதற்காக 1,500 ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவி புதிய அங்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அவர்களின் மருத்துவச் செலவுகள், ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் இதர சிறப்புத் தேவைகளுக்காக 1,200 ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் தங்களின் வீடுகளில் அடிப்படைச் சுகாதாரத் தேவைகளையும் வசதிகளையும் எவ்வித சிரமமுமின்றிப் பெறுவதையும், அவர்களின் வாழ்வாதாரம் வசதியாக அமைவதையும் உறுதி செய்வதே இந்த கூடுதல் நிதியுதவிகளின் முதன்மை நோக்கமாகும் என்று அன்ஃபால் சாரி விளக்கமளித்தார்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் பயனடைபவர்களின் வயது வரம்பு இதுவரை 18 ஆக இருந்த வேளையில், தற்போது அது 60 வயது வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், முதிர்ந்த மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்குத் தேவையான உபகரணங்கள், மருத்துவத் தேவைகள் மற்றும் சிகிச்சை (therapy) ஆதரவிற்கான நிதியுதவிகளை இனி தங்குதடையின்றிப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய சலுகைகள் மட்டுமன்றி, பழைய திட்டத்தில் இருந்த பயனுள்ள பல உதவிகளும் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது.

அந்த வகையில், சிகிச்சை மையக் கட்டணத்திற்கான நிதியுதவி (1,200 ரிங்கிட்), சிறப்பு உபகரணங்களுக்கான நிதியுதவி (3,000 ரிங்கிட் வரை) மற்றும் சிறப்புக் கல்விப் பள்ளிக் கட்டண உதவி (120 ரிங்கிட்) ஆகிய ஆதரவுகள் தற்போதும் தொடர்கின்றன.

இத்திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறைகளை எளிதாக்கும் பொருட்டு, தேவையான அனைத்துச் சான்றிதழ்களும் ஆவணங்களும் முழுமையாக இணையம் (online) வழியாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும் என்பதால் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் சுமை பெருமளவில் குறையும்.

எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி காலை 8:30 மணி முதல் ஜூன் 22-ஆம் தேதி மாலை 5:00 மணி வரை இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடையவர்கள் www.yanis.org.my/brais எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழி தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.