உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மக்களின் நலனே முக்கியம் - பிரதமர் அன்வார்

22 ஏப்ரல் 2026, 1:44 AM
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மக்களின் நலனே முக்கியம் - பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், ஏப்ரல் 22: தற்போது நிலவி வரும் சிக்கலான உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் மலேசிய அரசாங்கம் ஒருபோதும் மெத்தனமாக இருக்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மடாணி அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும், மக்களின் நலனை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதாகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அதே வேளையில், நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராதப் பாதிப்புகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவும், மலேசியா எப்போதும் எதற்கும் தயாராகவும், மீள்திறன் கொண்ட நாடாகவும் இருப்பதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான மற்றும் நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, ஓமான் போன்ற நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மடாணி அரசு முன்கூட்டியே விழிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, நாட்டின் எரிசக்தி விநியோக நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், ஓமான் நாட்டின் நேஷனல் கேஸ் நிறுவனத்தின் (National Gas Company SAOG Oman) தலைவர் ஷேக் அப்துல்லா சுலைமான் ஹமட் அல்-ஹார்தியைச் சந்தித்துப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது மற்றும் மூலோபாய ரீதியிலான கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது என்பது வெறும் விருப்பம் சார்ந்த முடிவு மட்டுமல்ல, அது ஒரு மூலோபாயத் தேவை என்றும் பிரதமர் விளக்கியுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் எரிசக்தி விநியோகச் சங்கிலி சீராக இருப்பதை உறுதி செய்வதுடன், எரிசக்தி விலையேற்றத்தால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் சுமையைத் தவிர்க்க முடியும் என அவர் தமது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.