உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலிருந்து மலேசியா முழுமையாகத் தப்பிக்க முடியாது – வல்லுநர்கள் எச்சரிக்கை

20 ஏப்ரல் 2026, 4:13 AM
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலிருந்து மலேசியா முழுமையாகத் தப்பிக்க முடியாது – வல்லுநர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - மலேசியா ஒரு பெட்ரோலிய ஏற்றுமதி நாடாகத் திகழ்ந்த போதிலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் ஏற்படும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலிருந்து நாடு முற்றிலும் தப்பித்துவிட முடியாது என்று மலேசிய தேசிய அகாடமியின் ஆய்வாளர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அவாங் அஸ்மான் அவாங் பாவி எச்சரித்துள்ளார்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இத்தகைய நெருக்கடிகளிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற பொதுவான கருத்து தவறானது என்று சுட்டிக்காட்டிய அவர், மலேசியா கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்வதற்கும் உள்நாட்டு எரிசக்தித் தேவைகளுக்கும் இன்னும் சில இறக்குமதி தயாரிப்புகளையே சார்ந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

தென்கிழக்கு ஆசியச் சூழலில் மலேசியா பாதுகாப்பிற்கும் ஆபத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலையிலேயே இருப்பதாகக் மீடியா சிலாங்கூர் தயாரிப்பில் ஒளிபரப்பான 'பிசாரா செமாசா' (Bicara Semasa) எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர் குறிப்பிட்டார்.

புவிசார் அரசியல் ரீதியாக மலேசியா ஒரு எரிசக்தி உற்பத்தியாளராகச் சற்று நிம்மதி அடைய முடிந்தாலும், பொருளாதார ரீதியாக உலகளாவிய சந்தையின் நிலையற்ற தன்மையால் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்று அவர் கூறினார்.

மேலும், நீண்டகால நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குத் தேவையான வலுவான மூலோபாய எரிசக்தி இருப்பு (Strategic Energy Reserve) மலேசியாவிடம் இன்னும் போதுமான அளவில் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் தற்போது வழங்கி வரும் எரிபொருள் மானியங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், இந்த மானியங்கள் ஒரு தற்காலிகக் கேடயமாக மட்டுமே செயல்பட முடியும் என்றும், நீண்ட காலத்திற்கு இதனைத் தொடர்ந்து முன்னெடுப்பது சவாலானது என்றும் தெரிவித்தார்.

இந்த உலகளாவிய நெருக்கடியால் மக்கள் எதிர்கொள்ளும் முதல் பாதிப்பு எரிபொருள் பற்றாக்குறையாக இருக்காது, மாறாகப் படிப்படியாக உயரும் விலையேற்றமாகவே இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதே இந்த விலை உயர்வின் முதல் புள்ளியாக அமையும் என்றும், அதனைத் தொடர்ந்து உணவுப் பொருட்கள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவினங்கள் மீது அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் நிலவும் பதற்றம் நேரடியாகச் சர்வதேசச் சந்தையில் விலையேற்றத்தை உண்டாக்கி, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.