கோலாலம்பூர், ஜூன் 25: கடந்த மே 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் 'பூடி மடாணி' (BUDI Madani) எரிபொருள் மானியத் திட்டத்தின் மூலம் 14 மில்லியன் மலேசியர்கள் பயனடைந்துள்ளதோடு, மொத்தம் 11.1 பில்லியன் லிட்டர் எரிபொருள் இந்த மானிய வரம்பிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது என மலேசிய நிதி அமைச்சு (MOF) தெரிவித்துள்ளது.
இதன் ஒட்டுமொத்த விற்பனை மதிப்பு 22.1 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ள வேளையில், அதில் 11.2 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கமே மானியமாக ஏற்றுக்கொண்டு மக்களுக்கு வழங்கியுள்ளது என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் அண்மையக் காலமாக ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடி காரணமாக, இந்த 'பூடி மடாணி' திட்டத்திற்கான அரசாங்கத்தின் மானியச் செலவினமானது கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சராசரியாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
"அரசாங்கம் இந்த 'பூடி மடாணி' திட்டத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதோடு, இந்த நிதியுதவியானது உண்மையில் தகுதியுடைய மக்களுக்கு மிகவும் நியாயமான, பயனுள்ள முறையில் போய்ச் சேருவதை உறுதி செய்வதற்காகக் தகுந்த மேம்பாடுகளையும் சீர்திருத்தங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும்," என நிதி அமைச்சு அறிக்கையில் உறுதியளித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மக்கள் தனியாக விண்ணப்பங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை என்பதை அமைச்சு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ஏனெனில் இதற்கான தகுதிகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன; அதன்படி, செல்லuபடியாகும் மலேசிய அடையாள அட்டை (MyKad) மற்றும் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) வைத்துள்ள அனைத்து மலேசியக் குடிமக்களும் இந்த மானியத்தைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.







