சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடிகளால் கடந்த ஆண்டு மட்டும் RM 1.47 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 9,603 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய மோசடிகளுக்கு சமூக ஊடகங்கள் முக்கியமாகப் பயன்படுத்தப் படுவதாகவும், மோசடியாளர்கள் பயன்படுத்தும் ஐந்து முக்கிய தந்திரங்களை ராயல் மலேசியா போலீஸ் (PDRM) அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK) இயக்குனர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா கூறுகையில், போலியான நிறுவனங்களை உருவாக்குதல், குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாக ஆசை காட்டுதல், போன்ஸி திட்டம், காதல் வலையில் வீழ்த்தி முதலீடு செய்ய வைத்தல் மற்றும் போலி கிரிப்டோ தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவையே மோசடியாளர்களின் முக்கிய தந்திரங்களாகும் என்றார்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஈர்க்கும் மோசடிக் கும்பல்கள், பின்னர் அவர்களை வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் மூலம் தொடர்பு கொள்ளச் செய்து, நிபுணர்களால் நிர்வகிக்கப் படுவதாகக் கூறப்படும் போலி முதலீட்டுக் குழுக்களில் சேர்க்கின்றனர்.
"பாதிக்கப்பட்டவர்கள் போலித் தளங்களில் தங்களுக்கு லாபம் கிடைத்திருப்பதாகக் காண்பார்கள். ஆனால், அந்தப் பணத்தை அவர்களால் எடுக்க முடியாது. மாறாக, செயலாக்கக் கட்டணம், வரி அல்லது பிற கட்டணங்கள் போன்ற கூடுதல் கட்டணங்க ளைச் செலுத்துமாறு அவர்கள் கேட்கப் படுவார்கள்," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு செயலிகளைத் தவிர, USDT (டெதர் கிரிப்டோகரன்சி) போன்ற கிரிப்டோ சொத்துகளின் பயன்பாடும் மோசடிகளில் அதிகரித்து வருவதாக ருஸ்டி கூறினார். சட்டவிரோத தளங்கள் மூலம் மோசடிக் கும்பல்களின் டிஜிட்டல் பணப்பைக்கு (digital wallet) நிதியை மாற்றுமாறு பாதிக்கப் பட்டவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.
"போன்ஸி திட்டத்தைப் பொறுத்தவரை, புதிய முதலீட்டாளர்களின் நிதியைப் பயன்படுத்தி ஆரம்ப லாபம் வழங்கப்படும். புதிய முதலீடுகள் இல்லாதபோது இந்தத் திட்டம் இறுதியில் தோல்வியடையும்," என்றார்.
2024-ஆம் ஆண்டில் 6,337 வழக்குகளில் RM848.6 மில்லியன் இழப்பும், 2025-ஆம் ஆண்டில் 9,603 வழக்குகளில் RM1.47 பில்லியன் இழப்பும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, 2,204 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு RM246.7 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தக் குற்றச்செயல் தொடர்ந்து கவலைக் குரியதாக இருப்பதைக் காட்டுகிறது," என்றார்.
பங்கு முதலீட்டு மோசடிகளே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கிரிப்டோ மற்றும் தங்கம் போன்ற பிரபலமான முதலீட்டு முறைகளை மோசடிக் கும்பல்கள் குறிவைக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில், 31 முதல் 50 வயதுக்குட்-பட்டவர்களே அதிகம், குறிப்பாக 41 முதல் 50 வயதுடையவர்கள். இவர்களைத் தொடர்ந்து 51 முதல் 60 மற்றும் 21 முதல் 30 வயதுக்குட்பட்ட-வர்களும் உள்ளனர். தனியார் துறையில் பணிபுரிபவர்களே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக அரசு ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் உள்ளனர் என்றும் ருஸ்டி குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதாகக் கூறும் முதலீட்டுச் சலுகைகளைக் கண்டு மக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், முதலீடு செய்வதற்கு முன் முழுமையான சரிபார்ப்பைச் செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
"பதிவு செய்யப் படாத தனிநபர் கணக்குகள் உட்பட சந்தேகத்திற்கிடமான கணக்குகளுக்கு எந்தப் பணப் பரிமாற்றமும் செய்ய வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.








