புத்ராஜெயா, ஏப்ரல் 15 – மலேசியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் வெள்ளத்தினால் ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பொருளாதார இழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது.
2024-இல் 933.4 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த இந்த இழப்பீடு, 2025-இல் 636.9 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.03 விழுக்காடாகும்.
தலைமைப் புள்ளிவிவர அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் வெளியிட்ட அறிக்கையின்படி, பொதுச் சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கே அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான இழப்பீடு 380.2 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. இருப்பினும், குடியிருப்பு வீடுகளுக்கான சேதம் 183.8 மில்லியன் ரிங்கிட்டாகவும், விவசாயத் துறைக்கான இழப்பு 52.6 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைந்துள்ளது.
இதுதவிர, வணிக வளாகங்கள், வாகனங்கள் மற்றும் உற்பத்தித் துறையிலும் முந்தைய ஆண்டை விடக் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளன.
மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்ச சேதம் ஏற்பட்ட மாநிலமாக சரவாக் (RM32.6 மில்லியன்) முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சபா (RM27.7 மில்லியன்) மற்றும் ஜோகூர் (RM26.2 மில்லியன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. வணிக வளாகங்களைப் பொறுத்தவரை, சரவாக் மற்றும் ஜோகூர் மாநிலங்களே அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
வெள்ளப் பாதிப்பு குறித்துப் புள்ளிவிவரத் துறை நடத்திய ஆய்வில் சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 51.2 விழுக்காட்டினர் முன்கூட்டியே அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைத்துத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 5.5 விழுக்காட்டினர் மட்டுமே காப்புறுதித் திட்டங்களில் இணைந்துள்ளனர். அதே வேளையில், 22.5 விழுக்காட்டினர் எவ்வித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
வெள்ளத்தினால் ஏற்படும் சொத்துச் சேதங்களில், வீட்டுத் தளவாடங்கள் (42.8%) அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து பிற வீட்டு உபயோகப் பொருட்கள் (29.4%) மற்றும் மின்சார சாதனங்கள் (27.8%) சேதமடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் நிதி ரீதியாகவும் தற்காப்பு ரீதியாகவும் தங்களை வலுப்படுத்திக் கொள்வது அவசியம் என டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் வலியுறுத்தினார்.







