டாக்கா, 13 ஜூலை – வங்காளதேசத்தின் தென்கிழக்கு பிராந்தியத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை குறைந்தது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், பல மக்கள் காயமடைந்துள்ளதுடன், இந்த இயற்கை பேரிடர் நாடு முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பங்களாடேஷின் 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து மற்றும் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பலர் இன்னும் வெளி உலகத்துடனான தொடர்பின்றி தவித்து வருகின்றனர்.
இந்த பேரிடரில் 39 பேர் காயமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மொத்தம் 38,422 குடியிருப்பாளர்கள் மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் இந்தியாவின் அஸ்ஸாம், மேகாலயா ஆகிய அண்டை மாநிலங்களில் நாளை காலை வரை தொடர் மழை பெய்யக்கூடும் என வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் கணித்துள்ளது.







