ஷா ஆலம், ஏப்ரல் 15 – ஜோகூர், பொந்தியான் அருகே ஸ்ரீ மெனாந்தி பாரிட் சீக்கோம் சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 37 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார்.
பெக்கான் நானாஸ், டத்தோ முகமட் யூனோஸ் சுலைமான் தேசிய இடைநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த ஜமாலியா அரிஸ் என்பவரே இந்த விபத்தில் பலியானவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொந்தியான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்பிரிடெண்டண்ட் ஹத்ரத் ஹுசைன் மியோன் ஹுசைன் இது குறித்துக் கூறுகையில், நேற்று மாலை 4.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட ஆசிரியை ஓட்டிச் சென்ற தோயோட்டா வயோஸ் (Toyota Vios) ரக கார், பாரிட் பாசிலாம் சந்திப்பிலிருந்து வெளியேற முயன்றபோது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த லாரியுடன் பலமாக மோதியுள்ளது.
இந்த மோதலில் ஆசிரியை ஜமாலியா பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு அவர் பொந்தியான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் எவ்விதக் காயமுமின்றி தப்பினார்.
தற்போது விபத்துக்குள்ளான லாரி மேல் விசாரணைக்காகக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 41 (1)-ன் கீழ் (அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல்) காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.








