ஜோகூர் பாரு, ஜூலை 20 — தாமான் டாயா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 15 முதல் 38 வயதுக்குட்பட்ட 12 ஆண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சிலர் நாற்காலிகளை வீசி மிகவும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொள்ளும் 37 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி முடிந்த பிறகு இச்சம்பவம் நடந்துள்ளதாகச் சமூக ஊடக கருத்துப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இரு அணிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட தூண்டுதலே இதற்குக் காரணம் என நம்பப்பட்டாலும், கலவரத்திற்கான உண்மைப் பின்னணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இன்று அதிகாலை 5.40 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக ஜோகூர் மாநிலக் காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.
ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்டப் காவல்துறை தலைமையகத்தின் D7 குற்றவியல் விசாரணைப் பிரிவினர் களத்தில் இறங்கி, இன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் தாமன் செத்திய இண்டா பகுதியில் சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் 148-ஆவது பிரிவின் (ஆயுதங்களைக் கொண்டு கலவரத்தில் ஈடுபடுதல்) கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கைது செய்யப்பட்ட 12 பேரில் மூவருக்கு ஏற்கனவே குற்றவியல் பதிவுகள் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. மேல் விசாரணைக்காக அனைத்துச் சந்தேக நபர்களையும் நாளை ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுப்புக்காவல் (Remand) பெறப்படும்.
பொதுமக்கள் இந்த விவகாரத்தில் தேவையற்ற ஊகங்களைப் பரப்புவதையோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.







