இரவு 7 மணி வரை நாடு முழுவதும் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

13 ஏப்ரல் 2026, 9:21 AM
இரவு 7 மணி வரை நாடு முழுவதும் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 13: இன்று இரவு 7 மணி வரை மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏற்படக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மாலை 4.10 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வட மாநிலங்களான கெடா மற்றும் பினாங்குடன், பேராக் மாநிலத்தின் கிரியான், லாருட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக் மற்றும் கிந்தா ஆகிய மாவட்டங்கள் இச்சீரற்ற வானிலையால் பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட், குவாந்தான் மற்றும் ரொம்பின் ஆகிய இடங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டரசு பிரதேசங்களிலும் இன்று மாலை வேளையில் மோசமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது.

தென் மாநிலமான நெகிரி செம்பிலானில் சிரம்பான் மற்றும் போர்டிக்சன் ஆகிய இடங்களிலும், ஜோகூர் மாநிலத்தின் செகாமட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக்கில் கூச்சிங், செரியான் மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகளும், சபாவில் உட்புறப் பகுதிகள், மேற்கு கடற்கரை, தாவாவ் மற்றும் சண்டாக்கான் ஆகிய இடங்களும் இந்த வானிலை எச்சரிக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வு மையத்தின் விளக்கப்படி, ஒரு மணிநேரத்தில் 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் அறிகுறிகள் தென்படும்போது அல்லது அத்தகைய மழைப்பொழிவு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும்போது இந்த எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

இடியுடன் கூடிய மழைக்கான இந்த எச்சரிக்கை ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால முன்னறிவிப்பாகும். எனவே, பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின் போது திறந்தவெளி இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.