ஷா ஆலம், ஏப்ரல் 11: ஜோகூர் பாரு, தாமான் மெகா ரியாவில் உள்ள உணவகம் ஒன்றில் மானிய விலை பாக்கெட் சமையல் எண்ணெயைத் முறைகேடாகப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில், அந்த உணவகத்தின் மேலாளர் நேற்று அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய விலை சமையல் எண்ணெய், வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு மாற்றப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) நேற்று மாலை 3 மணியளவில் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டது.
இது குறித்து ஜோகூர் மாநில KPDN இயக்குனர் லிலிஸ் சஸ்லிண்டா பொர்னோமோ கூறுகையில், சோதனையின் போது மானிய விலை பாக்கெட் சமையல் எண்ணெய் பிரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தார். இந்த எண்ணெய் சட்டவிரோதமான முறையில் உணவக வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சோதனை நடைபெற்ற இடத்தில், பாக்கெட்டுகளை வெட்டுவதற்கான கத்தரிக்கோல், எண்ணெயை ஊற்றப் பயன்படுத்தப்படும் புனல்கள் மற்றும் காலி பாட்டில்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, அந்த உணவகத்தில் சர்க்கரை, மாவு மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியக் கட்டுப்பாட்டுப் பொருட்களை முறையான அனுமதி இன்றி சேமித்து வைத்திருந்ததும் விசாரணையில் அம்பலமானது.
தற்போது 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த உணவகத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு கண்டெடுக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாட்டுப் பொருட்களும் மேல் நடவடிக்கைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த லிலிஸ் சஸ்லிண்டா, மானிய விலைப் பொருட்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.








