கோத்தா பாரு, அக்.1- மூன்றாண்டுகளுக்கு முன்னர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மொத்த விற்பனை அளவில் கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பொருளான 15,483 கிலோகிராம் சமையல் எண்ணெயை வைத்திருந்ததாக வணிக வளாக உரிமையாளர் மீது இன்று இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி நிக் ஹப்ரி முகமது முன் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 28 வயதான அகமது நிஜாமுடின் செதாபா மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 22,ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் பச்சோக், பெரிஸ், கம்போங் நிபோங்கில் உள்ள ஒரு வளாகத்தில் பெலங்கா முத்திரையிடப்பட்ட 7,135 கிலோ ஒரு கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளையும், அதே ஆண்டு நவம்பர் 24 அன்று இரவு 9.15 மணியளவில் கோத்தா பாரு காவல் நிலையத்திற்கு முன்னால் 8,348 கிலோ ஜாலிலி முத்திரையிடப்பட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளையும் வைத்திருந்ததாக அகமது நிஜாமுடின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 21(1)வது பிரிவின் கீழ் அவ்வாடவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் துணை அரசு வழக்கறிஞர் சித்தி எடபாயு சுபான், சட்ட அதிகாரி முகமதி இமான் மஸ்ஜூரி ஆகியோர் வழக்கை நடத்தினர், குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் சைட் முகமது ஷயாபிக் சையத் அபு பக்கர் ஆஜரானார்.
உரிமம் இன்றி 15,000 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் வைத்திருந்ததாக வணிகர் மீது குற்றச்சாட்டு
1 அக்டோபர் 2025, 6:58 AM