ஷா ஆலம், ஏப்ரல் 11: கோத்தா டாமன்சாரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாகப் பெரும் சவாலாக விளங்கும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், 481 மில்லியன் ரிங்கிட் செலவிலான சுங்கை டாமன்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டம் 2031-ஆம் ஆண்டுக்குள் முழுமையடையும் என்று கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் முகமட் இசுவான் அகமட் காசிம் தெரிவித்துள்ளார்.
இந்த உயர்திறன் கொண்ட திட்டமானது, சுங்கை டாமன்சாரா நதி வலையமைப்பு முழுவதையும் உள்ளடக்கியது என்றும், குறிப்பாகக் கம்போங் மலாயு சுபாங்கில் உள்ள ஜாலான் மெர்பாவ், ஜாலான் தெம்புசு மற்றும் ஜாலான் பி.கே.என்.எஸ் (PKNS) போன்ற அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கருத்தில் கொண்டு இது செயல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் போது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் ஒட்டுமொத்தமாகக் குறைக்கப்படும் என்று அவர் 'மீடியா சிலாங்கூர்' செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இது வடிவமைப்பு நிலையில் (Design Stage) உள்ளதாகவும் அவர் விளக்கினார்.
பெருந்திட்டப் பணிகள் நிறைவடைவதற்கு முன்னதாக, உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய காலத் தடுப்பு நடவடிக்கைகளும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கம்போங் மலாயு சுபாங்கில் உள்ள ஆறுகள் மற்றும் முக்கிய நீர்வழிகளைத் தோண்டி ஆழப்படுத்தும் பணிகளும், அவற்றை விரிவுபடுத்தும் பணிகளும் தற்பொழுது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், செக்சன் U5 பகுதியில் அடையாளம் காணப்பட்ட மூன்று நீர்த்தேக்கக் குளங்கள் பராமரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்படுவதன் மூலம், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் புகாமல் தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் கூறினார்.
செக்சன் U4 போன்ற தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீர் வெளியேற முடியாமல் பின்னோக்கி வருவதாலேயே வெள்ளம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்துப் பேசிய இசுவான், தான் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றது முதல் இதுவரையில் சுமார் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ரிங்கிட் வரையிலான உடனடி நிதியுதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உணவு, உடை மற்றும் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஒவ்வொரு முறையும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும்போது எவ்விதத் தாமதமும் இன்றி மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் சுமையைக் குறைக்கத் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.





