ஷா ஆலம், ஏப்ரல் 10: நாட்டின் நிதிச் சுமையைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக, தற்போது மானிய விலையில் ஒரு லிட்டர் 1.99 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படும் RON95 பெட்ரோல் விலையை 2.05 ரிங்கிட்டாக உயர்த்தப் பரிசீலிக்குமாறு உலக வங்கி மலேசிய அரசாங்கத்தைப் பரிந்துரைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக, மலேசியாவின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை அவசியம் என உலக வங்கியின் மலேசியாவுக்கான தலைமைப் பொருளாதார நிபுணர் அபூர்வா சாங்கி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 2026-க்கான மலேசியப் பொருளாதாரக் கண்காணிப்பு (MEM) அறிக்கையைச் சமர்ப்பித்து வியாழக்கிழமை நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டுத் தேவையைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘BUDI95’ போன்ற எரிபொருள் ஒதுக்கீடு வழிமுறைகளை வரவேற்றுள்ள அவர், அதே வேளையில் நீண்ட காலத்திற்கு தற்போதைய குறைந்த விலையிலேயே பெட்ரோலை விற்பனை செய்வது அரசாங்கத்தின் கஜானாவிற்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
"சந்தை விலையின் தாக்கத்தை அரசாங்கத்தால் இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாங்க முடியும்? நிதி நிலைமை தொடர்ந்து பாதிக்கப்பட்டால், விலையில் மாற்றங்களைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65 அமெரிக்க டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய கிழக்கு மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த எதிர்பார்ப்பைத் தாண்டி அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, அரசாங்கத்தின் மானியச் செலவு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது பெட்ரோல் மானியத்திற்காக மட்டும் மாதந்தோறும் சுமார் 200 கோடி (2 பில்லியன் ) ரிங்கிட்டை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளது.
அதேபோல், டீசல் மானியச் செலவும் இதற்கு முன்னதாக இருந்த 70 கோடி ரிங்கிட்டிலிருந்து 120 கோடி ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.









