ஏழு மலேசியக் கப்பல்களில் ஒன்று ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்தது - பிரதமர்

10 ஏப்ரல் 2026, 8:25 AM
ஏழு மலேசியக் கப்பல்களில் ஒன்று ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்தது - பிரதமர்

கோலாலம்பூர், ஏப்ரல் 10: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சிக்கியிருந்த ஏழு மலேசியக் கப்பல்களில் ஒன்று பாதுகாப்பாக அந்தப் பகுதியைக் கடந்து தற்போது மலேசியாவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சருமான அவர் இது குறித்துக் கூறுகையில், எஞ்சியுள்ள ஆறு கப்பல்களும் அந்த முக்கியமான வர்த்தகப் பாதையைக் கடப்பதற்கான அனுமதியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

பெட்ரோனாஸ் (Petronas) குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ தெங்கு முகமட் தவ்பிக் இன்று தமக்கு வழங்கிய விளக்க அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நாட்டின் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி சீராக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணைப் பகுதி, கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்தத் தடங்கலால் உலகச் சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ள நிலையில், மலேசியாவின் நிலைமை குறித்து பிரதமர் இன்று செராஸ் பாரு, மஸ்ஜித் நுருசாதாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரின் சுமையைக் குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வரும் வேளையில், இதர துறையினரின் நிதி அழுத்தத்தைக் குறைக்கச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஆய்வு நடத்தி வருகின்றன.

அதே வேளையில், நாட்டின் நிதி நிலைமைக்கு நெருக்கடி ஏற்பட்ட போதிலும், 'BUDI95' திட்டத்தின் வாயிலாக RON95 பெட்ரோல் விலையை மாற்றமின்றித் தக்கவைக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் போது மக்களின் சுமையைக் குறைப்பதே தற்போதைய முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சவாலான காலத்தில் மக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

"BUDI95 திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 200 லிட்டர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.