ஷா ஆலம், ஏப்ரல் 9: சிலாங்கூர் மழலையர் பள்ளி உதவித் திட்டத்திற்கான (துனாஸ்) விண்ணப்பங்கள் இன்னும் திறந்திருப்பதால், தகுதியுள்ள பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் பிள்ளைகளின் ஆரம்பக் கல்விக்கு உதவி கோரி விண்ணப்பிக்கலாம்.
யாவாஸ் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், ரிம5,000 மற்றும் அதற்குக் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
விண்ணப்பதாரர் சிலாங்கூரில் பிறந்தவராக அல்லது வசிப்பவராக இருக்க வேண்டும், மேலும் மாநிலத்தில் பதிவு செய்த வாக்காளராக இருப்பதும் தகுதிக்கான நிபந்தனைகளில் அடங்கும்.
குழந்தைகள் கல்வி அமைச்சு, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS) மற்றும் கெமாஸ் (KEMAS) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட மழலையர் பள்ளிகளில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு, வழங்கப்பட்டுள்ள கியூஆர் (QR) குறியீட்டைப் ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது tunas.yawas.com.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், விண்ணப்பதாரர் மற்றும் துணையின் அடையாள அட்டை நகல், தேர்தல் ஆணையத்தின் (SPR) வாக்காளர் பதிவு சரிபார்ப்பு நகல் மற்றும் சமீபத்திய ஊதிய அறிக்கை போன்ற முழுமையான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய மழலையர் பள்ளி பதிவுச் சீட்டு அல்லது கட்டண ரசீதும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தின் போது அனைத்து ஆவணங்களும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும். யாவாஸ் அலுவலகத்திற்கு நேரடியாக எந்த ஆவணங்களையும் அனுப்பத் தேவையில்லை.








